Published : 25 Apr 2019 02:34 PM
Last Updated : 25 Apr 2019 02:34 PM

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், ஐதராபாத் வீடு உள்ளிட்ட 4 சொத்துகள் முடக்கம்: உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்

ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை கே.கே.நகரை சேர்ந்த அதிமுக நிர்வாகி புகழேந்தி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில் ஜெயலலிதாவுக்கு 913 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாகவும், இவற்றை யார் நிர்வகிக்க வேண்டும் என ஜெயலலிதா உயில் இல்லாததால், உயர் நீதிமன்றம் நிர்வாகியை நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவின் சொத்துகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2016 - 2017 ஆம் ஆண்டுக்கான வருமான வரித்துறை கணக்குப்படி ஜெயலலிதாவுக்கு 16.37 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், கார் உள்ளிட்ட சொத்துகளும், வங்கியில் 10 கோடி ரூபாய் இருப்பு இருப்பதாகவும், 1990- 91 முதல் 2011 -12 வரை 10.12 கோடி செல்வ வரி பாக்கி இருப்பதாகவும், 2005-06 முதல் 2011-12 வரை 6.62 கோடி வருமான வரி பாக்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லம், ஐதராபாத் வீடு உள்ளிட்ட 4 சொத்துகள் முடக்கம் செய்திருப்பதாக வருமான வரித்துறையின் துணை ஆணையர் ஷோபா அறிக்கை தாக்கல் செய்தார்.

அதேபோல, 1,000 கோடி வரையிலான ஜெயலலிதாவின் சொத்துகள் தனி நபர் ஒருவரை நிர்வகிக்க கேட்க முடியாது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று தனி நீதிபதி தள்ளுபடி செய்திருப்பதாக தீபக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x