Published : 09 Apr 2019 11:05 AM
Last Updated : 09 Apr 2019 11:05 AM

8 வழிச்சாலை திட்ட அறிவிப்பாணை செல்லாது; உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று இனிப்பு வழங்கி விவசாயிகள் கொண்டாட்டம்: மேல்முறையீடு செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக தமிழக அரசின் அறிவிப்பாணை செல்லாது என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் விவசாயிகள் கொண்டாடினர்.

சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 277 கி.மீ., தொலைவுக்கு 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய- மாநில அரசுகள் தீவிரம் காட்டின. இந்த திட்டத்தால் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் அதிகளவு பாதிக்கப்பட இருந்தனர். 277 கி.மீ., தொலைவில் 122 கி.மீ., தொலைவு சாலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைய இருந்தது. இது 45 சதவீதமாகும். இதற்காக, 96 ஊராட்சிகளில் சுமார் 900 ஹெக்டர் விவசாய நிலம், வனப் பகுதி கையகப்படுத்தப்பட இருந்தது. இந்தத் திட்டத்தை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர்.

இந்நிலையில், "சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலைத் திட்டத்தின் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணை செல்லாது மற்றும் இதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களும் செல்லாது" என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம் விவசாய நிலம், வன நிலம் உள்ளிட்டவை காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை விவசாயிகள், விவசாய சங்கங்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர். இதையொட்டி, திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம், செய்யாறு, வந்தவாசி, போளூர் வட்டங்களில் வசிக்கும் விவசாயிகள், பட்டாசு வெடித்தும் மற்றும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மேலும், சில இடங்களில் விவசாய நிலங்களில் புதைக்கப்பட்டிருந்த குறியீடு கற்களை விவசாயிகளே அகற்றினர்.

இது தற்காலிக தீர்ப்புதான்

பெலாசூர் கிராமத்தில் வசிக்கும் மூதாட்டி கிருஷ்ணவேணி கூறும்போது, "என்னுடைய 2 ஏக்கர் நிலம், கிணறு, வேப்ப மரம், மா மரம், தென்னை மரம் ஆகியவை 8 வழிச்சாலை திட்டத்தால் பறிபோக இருந்தது. உயர் நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பின் மூலம், எனது விவசாய நிலம் தற்காலிகமாக காப்பாற்றப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் மீண்டும் அரசாணை வெளியிட்டால், நாங்கள் என்ன செய்வது. எனவே, நீதிமன்றம் நிரந்தரமான தீர்ப்பை வழங்க வேண்டும்" என்றார்.

தீர்ப்பை மதிக்க வேண்டும்

இயற்கை ஆர்வலர் குழந்தைவேலு கூறும்போது, "8 வழிச்சாலைத் திட்டத்தால் ஐந்து மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட இருந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கி.மீ., தொலைவுக்கு சாலை அமைப்பதற்காக ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம், வன நிலம், நீர் நிலைகள், பள்ளிகள், கோயில்கள் பறிபோக இருந்தன. இவை அனைத்தும் நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளது.

5 மாவட்ட விவசாயிகளுக்கு விடிவு காலம் பிறந்துள்ளது.

அரசாணை மற்றும் நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்பது மகிழ்ச்சியான தீர்ப்பாகும். விவசாயிகளின் ஓராண்டு துன்பத்துக்கு கிடைத்த தீர்வு. நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, 8 வழிச் சாலைத் திட்டத்தை மத்திய- மாநில அரசுகள் கைவிட வேண்டும்" என்றார்.

விவசாயிகளை பாதிக்கும் திட்டம்

பெரியகிலாம்பாடி கிராமத் தைச் சேர்ந்த விவசாயி வேலன் கூறும்போது, "என்னுடைய இரண்டரை ஏக்கர் விவசாய நிலம், கிணறு போன்றவை பறிபோக இருந்தது. விவசாய நிலம்தான் எங்களது வாழ்வாதாரம். அதனை இழக்க இருந்த நிலையில், உயர்

நீதிமன்ற தீர்ப்பு மூலம் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மத்திய- மாநில அரசுகள் ஏற்று செயல்பட வேண்டும். விவசாயம் மற்றும் விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை அரசாங்கம் கொண்டு வரக்கூடாது" என்றார்.

இனியும் வஞ்சிக்கக் கூடாது

சிறுகிலாம்பாடி கிராமத்தில் வசிக்கும் சம்பத் கூறும்போது, "உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் 8 வழிச்சாலை திட்டத்தாக பறிபோக இருந்த எனது 2 ஏக்கர் விவசாய நிலம் காப்பாற்றப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பு கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது.

எதிர் காலத்தில் என்னை போன்ற அனைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் துணையாக இருக்க வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து விவசாயிகளை வஞ்சிக்க கூடாது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x