Published : 15 Apr 2019 11:26 AM
Last Updated : 15 Apr 2019 11:26 AM

வேலையும் கிடைப்பதில்லை... முழு கூலியும் தருவதில்லை... வேதனையில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள்!

நாங்கள் ஆட்சி அமைத்தால் 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக, 200 நாட்களாக உயர்த்துவோம்’ என்ற வாக்குறுதி, தேர்தல் களத்தில் பல்வேறு கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் பலனடைபவர்களின் லட்சக்கணக்கான வாக்குகளை குறிவைத்து, இந்த வாக்குறுதி அளிக்கப்படுகிறது. தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் பரவியுள்ள 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களின் வேதனையும், கோரிக்கைகளும் இன்னும் பலரையும் சென்றடையவில்லை. `சும்மா... படுத்து தூங்கி எழுந்து சம்பளம் வாங்கிட்டுப் போறாங்க’ என்று இந்தப்  பணியாளர்களை ஏளனம் செய்பவர்களும் உண்டு. கிராமப்புற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய 100 நாள் வேலைத்திட்டத்தில் என்ன நடக்கிறது?

நகரமயமாக்கல் அதிகரித்து வரும் நிலையில், கிராமங்களைப் பாதுகாக்க வேண்டுமானால், அங்கு வாழும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகள் அவசியமாகின்றன. வறட்சியால் விவசாயம் பொய்த்து வரும் நிலையில், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க,  அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டது. இந்த அவசியத்தை உணர்ந்த மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தைக்  கொண்டுவந்தது.

இதன்படி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் 100 நாட்களுக்கு குறையாமல் வேலையை உறுதி செய்வது இந்த திட்டத்தின் நோக்கம். தேசிய அளவிலான இந்த வேலை உறுதி சட்டமானது, அனைத்து குடிமக்களுக்கும் வேலை பெறுவது ஒரு அடிப்படை உரிமை என்ற நிலையினை உருவாக்கியுள்ளது.

இந்த திட்டம் கடந்த 2006-ல் தேசிய அளவில் முதல்கட்டமாக 200 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. இரண்டாவது கட்டமாக 2007-ல் 130 மாவட்டங்களிலும், மூன்றாவது கட்டமாக 2008 முதல் இந்தியாவில் அனைத்து ஊரகப் பகுதிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது,  நாடு முழுவதும் 661 மாவட்டங்களில் 2.62 லட்சம் கிராம ஊராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கிராமப்புற மக்களுக்கான வேலையை உறுதி செய்வது மட்டுமல்லாமல், கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகக் கருதப்படுகிறது.

ஏராளமான விதிமுறைகளை வகுத்து உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தின் பலன் முழுமையாகத் தொழிலாளர்களைச் சென்றடையாத நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என்றும், பணி செய்தவர்கள் காலம் தாழ்த்தாமல் ஊதியம் வழங்க வேண்டும் என்றும் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்காக ஒரு சங்கத்தை தொடங்கி, அவர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான  பி.எல்.சுந்தரம். 100 நாள் வேலைத் திட்டத்தில் என்ன நடக்கிறது என்ற கேள்வியுடன் அவரை அணுகினோம்.

“கிராமப்புறங்களில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு 100 நாள் வேலைத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில் பணிபுரிய விரும்பும் பயனாளிகள், கிராம ஊராட்சிகளில் பதிவு  செய்து, அவர்களுக்கென அடையாள அட்டை பெற வேண்டும். இந்த அடையாள அட்டை பெற்ற பயனாளிக்கு, விண்ணப்பித்த 15 தினங்களுக்குள் வேலை வழங்க வேண்டும்.

குளம், குட்டைகளைத்  தூர் வாருதல், நீர்நிலைகளை ஆழப்படுத்துதல், தோட்டங்களில் மண் வரப்பு, கல் வரப்பு கட்டுவது, கட்டுமானப் பணி என பலவகையான பணிகளை இந்த தொழிலாளர்கள் மேற்கொள்கின்றனர்.

இவர்களுக்கான ஊதியம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ரூ.224-ஆக அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு வெறும் ரூ.5 மட்டும் உயர்த்தப்பட்டு, 229 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான பணி  7 மணி நேரமாகும். ஒரு மணி நேர ஓய்வையும் கணக்கில் கொண்டு, மொத்தம் 8 மணி நேரம் பணி தளத்தில் இருக்க வேண்டும். 

ஆனால், நடைமுறையில் ரூ.160 முதல் ரூ.190 வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. தொழிலாளர்களின் பணிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படுவதாக காரணம் கூறப்படுகிறது. அவர்கள் செய்யும் பணியை அளவிட பொதுவான எவ்வித மதிப்பீட்டு முறையும் இல்லாத நிலையில், அப்பாவித்  தொழிலாளர்களுக்கு சென்று சேர வேண்டிய ஊதியம் அநியாயமாகப் பறிக்கப்படுகிறது.

ஒரு நாள் ஊதியம் என அரசு நிர்ணயித்துள்ளதை முழுமையாக வழங்க வேண்டும். வேலை அளவு அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்யக்கூடாது. பணிகளை மேற்கொள்ளத் தேவையான மண்வெட்டி, கடப்பாறை போன்ற பொருட்களை,  தொழிலாளர்களே எடுத்து வருமாறு கூறுகின்றனர். இந்த பொருட்களையும்  அரசே வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டம் என்ற பெயர் இருந்தாலும், முழுமையாக 100 நாட்கள் வேலை வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் 200 நாட்கள் வரை நீட்டிப்பு தருவதாக தற்போது வாக்குறுதி வழங்கப்படுகிறது” என்றார்.

நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் சங்கச் செயலாளர் நடராஜ் கூறும்போது, “பணியாளர்கள், அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவுக்கு மேல் சென்று வேலை செய்ய வேண்டுமானால், போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். அல்லது பத்து சதவீத கூடுதல் ஊதியம் வழங்கவேண்டும். மேலும், இந்த சட்டத்தின் படி 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்கவேண்டும். இந்த விதிமுறைகள் எதுவும் நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை.

இவர்களது சம்பளம் வங்கியில் வரவு வைக்கப்பட்டு, வணிகத் தொடர்பாளர்கள் மூலம் தொழிலாளர்களைச் சென்றடைகிறது. இதற்கு எவ்வித ரசீதும் வழங்கப்படுவதில்லை. வேலை செய்யும் இடத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், முதலுதவிப் பெட்டி போன்ற வசதிகள் எதுவும் செய்து தரப்படுவதில்லை.

கிராமப்புற மக்களின் நிலையைப் புரிந்து கொள்ளாதவர்கள், வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குவதாக ஏளனம் செய்கின்றனர். ஆனால், ஏழைகளின் நிலை குறித்து ஆய்வு செய்து, அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அரசு இந்த திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. பல இடங்களில் விவசாயம் பொய்த்துப்போன நிலையில், வேலையில்லாமல், உணவுக்கும்  வழியில்லாத நிலையில் உள்ள தொழிலாளர்களுக்கு நம்பிக்கையளிக்கும் இந்த திட்டத்தை ஏளனம் செய்பவர்கள், அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பணிகளை நேரில் சென்று பார்க்க வேண்டும்.

சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி ஒன்றியங்களில் மட்டும் 10 ஆயிரம் பேர், 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிகின்றனர். தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்துவதால் மட்டுமே, தொழிலாளர்களுக்கான வேலையும், உரிய காலத்தில் சம்பளமும் கிடைக்கிறது. மற்ற இடங்களில் முறையாக வேலையும் வழங்கப்படுவதில்லை. உரிய காலத்தில் ஊதியமும் வழங்கப்படுவதில்லை” என்றார்.

கிராமப்புற ஏழை மக்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும்  100 நாள் வேலைத்திட்டத்தை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x