Published : 01 Apr 2019 07:03 PM
Last Updated : 01 Apr 2019 07:03 PM
வருமான வரித்துறையை வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டும் வேலையை மோடி செய்து கொண்டிருக்கிறார். போலீஸ் புகார் வந்தால் நடவடிக்கை என தேர்தல் ஆணையம் சொல்கிறது. நான் புகார் தருகிறேன் நடவடிக்கை எடுப்பீர்களா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
வேலூர் மாவட்டம் சோளிங்கரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் துரைமுருகன் வீட்டில் ரெய்டு குறித்து கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார்.
அவரது பேச்சு:
''ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவும், பாஜகவும் தோல்வி பயம் வந்த காரணத்தினால் திமுக தொண்டர்களை, தோழர்களை தேர்தல் பணி செய்ய விடாமல் தடுக்க வேண்டும், கோபத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான பணிகளில் புதிதாக ஈடுபட்டிருக்கின்றார்கள்.
ஏற்கெனவே, கர்நாடக மாநிலத்தில் வருமான வரித்துறையை அனுப்பி அமைச்சர் வீட்டில் ரெய்டு செய்தார்கள். ரெய்டு செய்வது தவறு என்று நான் சொல்லவில்லை. ஏதாவது புகார் வந்தால், வருமான வரித்துறையை ஏமாற்றினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு வருமான வரித்துறைக்கு உண்டு. அதை நான் மறுக்கவில்லை.
ஐந்து வருடமாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல், தேர்தல் நேரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு துரைமுருகன் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் வந்துள்ளார்கள். அவரது மகன் நடத்தக்கூடிய கல்லூரிக்குச் சென்று இருக்கின்றார்கள். அவர் இன்றைக்கு வேலூர் தொகுதியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கின்றார்.
கட்சியில் இருக்கக்கூடிய முன்னணித் தலைவர்களில் ஒருவர் பொருளாளர் துரைமுருகன். அவர் மீது தவறு இருந்தால் தண்டிக்கட்டும், கண்டிக்கட்டும், எந்த நீதிமன்றத்திற்கும் நான் வரத் தயார் என்று அவரே சொல்லியிருக்கிறார். நாங்கள் பனங்காட்டு நரி சலசலப்புக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம் என்று மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கின்றார்.
ஆனால், என்ன நடக்கின்றது, எதிர்க்கட்சியை மிரட்டுவதற்காக வருமான வரித்துறையைப் பயன்படுத்துகின்றார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில் 15 கோடி ரூபாயை வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு செய்து எடுத்து இருக்கின்றார்கள். எடுத்ததற்குப் பிறகு அமைதியாகப் போய்விட்டார்கள்.
அதைப்பற்றி ஏதாவது விளக்கம் சொல்லி இருக்கின்றார்களா? நடவடிக்கை எடுத்து இருக்கிறார்களா? அவர்களை அழைத்து ஏதாவது விசாரணை செய்து இருக்கின்றார்களா? இல்லை. ஏனென்றால் சபேசன் இன்றைக்கு அமைச்சர்களில் ஒருவராக இருக்கக்கூடிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மிகவும் வேண்டியவர்.
அவருக்குத்தான் உள்ளாட்சித்துறையைப் பொறுத்தவரையில் எல்லா கான்ட்ராக்ட்களும், வேலுமணி மூலமாக சபேசனுக்குத் தொடர்ந்து வழங்கப்படுகிறது. அந்த ரெய்டு விவரம் குறித்து இன்னும் வெளிவரவில்லை.
துரைமுருகன் வீட்டில் ரெய்டு செய்கின்றாகள். இது நியாயமா? என்று தேர்தல் ஆணையரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபொழுது, போலீஸாரிடம் இருந்து புகார் வந்தது. ஆகவே, அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் மூலமாக நடவடிக்கை எடுக்கின்றோம் என்று சொல்கின்றார்கள்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் எவ்வளவு தொகை, கோடி கோடியாக பணம் வைத்திருக்கின்றார். ரெய்டு செய்யுங்கள் என்று நான் சொன்னால் நடவடிக்கை எடுப்பார்களா? அமைச்சர்கள் வீட்டில் பணம் பதுக்கி வைத்து இருக்கின்றார்கள்.
அவர்கள் சொந்தக்காரர்கள் வீட்டில் இருக்கின்றது. பினாமி வீட்டில் இருக்கின்றது என்று நான் புகார் எழுதிக் கொடுத்தால் இந்த வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்குமா? வருமான வரித்துறை என்பது ஒரு தன்னாட்சி அமைப்பு. அதை இன்றைக்கு பிரதமர் தவறான முறையில் பயன்படுத்துகின்றார்.
இன்றைக்கு தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற வாய்ப்பே இல்லை. எப்படி அதிமுகவைப் பயப்படுத்தி மிரட்டி அச்சுறுத்தி சிபிஐ ரெய்டு, புலனாய்வுத் துறை சோதனை மூலம் அடிபணிய வைத்தார்களோ, அதேபோல் நம்மையும் அடிபணிய வைக்க முயற்சிக்கிறார்கள். திமுக எதற்கும் மசியமாட்டேன் என்கிறது. இது மசியாது, இது பனங்காட்டு நரி - இது மசியாது.
நாங்கள் தடாவைப் பார்த்தவர்கள். மிசா, பொடாவைப் பார்த்தவர்கள். உங்களுடைய சட்டம் எங்களை என்ன செய்யப் போகின்றது? மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் நாம் அடிபணியப் போவதில்லை. எனவே தான், இந்த அநியாய ஆட்சிக்கு விடை சொல்லக்கூடிய நாள் நெருங்கி விட்டது''.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT