Published : 04 Apr 2019 07:49 AM
Last Updated : 04 Apr 2019 07:49 AM

உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தும் தேர்தல் பிரச்சாரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி: குறுகலான தெருக்களில் வசிப்போர் அவதி

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது பட்டாசு வெடிக்க கட்சியினர் அனுமதிக்கப்படுவதால் குறுகலான தெருக்களில் வசிக்கும் பொதுமக்கள் ஒலி மற்றும் புகை மாசுவால் அவதிப்பட்டு வருகின்றனர்.

பட்டாசு வெடிப்பதால் ஒலி மற்றும் புகை மாசு ஏற்படுவதால், பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில், “நாடு முழுவதும் தீபாவளி மற்றும் பிற விழாக்காலங்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது மட்டும் நள்ளிரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை 35 நிமிடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது” என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தமிழகத்தில் மட்டும் தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரை மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை என மொத்தம் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்தப் பிரச்சாரங்களின்போது பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னை போன்ற மக்கள் அடர்த்தி மிகுந்த, குறுகலான சாலைகளைக் கொண்ட பகுதிகளில் வெடிக்கும் பட்டாசுகளால் மிகை ஒலியும், புகை சிதைவடையாத சூழலும் ஏற்படுவதால், அப்பகுதியில் குடியிருப்போர் கடும் அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, “தமிழகத்தில் சுவரொட்டி, டிஜிட்டல் பேனர்கள் வைக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளில், இவற்றுக்கு தடை இல்லாத நிலையில், தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்த நிலையில், அதை தேர்தல் ஆணையம் அமல்படுத்தவில்லை. இந்த தேர்தல் பிரச்சாரத்தால், காற்று மாசு, போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதைத் தடுக்க வேண்டும்” என்றனர்.

பதில் அளிக்கவில்லை

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது பட்டாசு வெடிப்பதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தகவல் கோரி கடந்த மார்ச் 11-ம் தேதி மாநில தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹுவுக்கு, மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அவர் இதுவரை பதில் அளிக்கவில்லை. அவரது அலுவலகத்துக்கு பலமுறை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டும் அவரிடம் பேச முடியவில்லை. பட்டாசு வெடிப்பதை தடுப்பது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்த அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய இன்னும் 12 நாட்களே இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x