Published : 09 Apr 2019 10:53 AM
Last Updated : 09 Apr 2019 10:53 AM

முதல்வர், ஸ்டாலின் இடையே முற்றும் வார்த்தைப் போர்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் ஒருமையில் பேசி விமர்சித்து வருவதால் கட்சித் தலைவர்களின் பேச்சுகள் தரம் தாழ்ந்து வருகிறதா என்று கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.

அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரச்சாரத்தின் தொடக்கத்தில் பெரும்பாலான தலைவர்களிடமிருந்து நாகரிகமான பேச்சுகள் மட்டுமே வெளிப்பட்டன. ஆளுங்கட்சியினர் தாங்கள் செய்த சாதனைகள் குறித்தும், எதிர்க்கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் செய்ய உள்ள திட்டங்கள் குறித்தும் பேசிவந்தனர்.

நாட்கள் செல்லச் செல்ல கட்சித் தலை வர்களின் பிரச்சாரத்தில் தனிநபர் விமர்சனம், ஒருவரையொருவர் நீ, வா, போ என்ற சொற்களால் ஒருமையில் பேசுவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக முதல்வர் பழனிசாமி, திமுக தலை வர் ஸ்டாலின் ஆகியோரிடையே இது போன்ற பேச்சு அதிகம் காணப்படுகிறது.

பிரச்சாரக் கூட்டங்களில் ஸ்டாலின் பேசுகையில், "தமிழக முதல்வர் பழனிசாமி ஒரு விவசாயி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் விவசாயி அல்ல விஷவாயு, இது கேடுகெட்ட ஆட்சி என விமர்சனங்களை கடுமையாகவே முன்வைக்கிறார். இதேபோல் பல இடங்களில் தமிழக முதல்வரை தரம்தாழ்ந்து விமர்சனம் செய்து வருவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் முதல்வர் பழனிசாமியும் ஒருமையில் பேசி விமர்சனம் செய்கிறார். சமீபத்தில் ஒட்டன்சத்திரத்தில் முதல்வர் பழனிசாமி பேசும்போது, "மரியாதை கொடுத்து பேசினால் மரியாதை கிடைக்கும். மரியாதையின்றி பேசினால் நான் கிராமத்தில் இருந்து வந்தவன். நான் பேசினால் காது ஜவ்வு கிழிந்துவிடும். பிரதமர், முதல்வர் என எல்லோரையும் கீழ்த்தரமாக பேசுவதன் மூலம் இவர் கீழ்த்தரமான மனிதர் என்று காட்டிவிட்டார் என்றார்.

தொடர்ந்து பழநியில் முதல்வர் பேசும்போது, என்னைப் பற்றி தவறாகப் பேசினால் உனக்கு பதிலடி கொடுக்க நான் தேவையில்லை. இங்குள்ள தொண்டர்களே போதும். அதிமுக ஆட்சியில் செய்த திட்டங்கள், மக்கள் பயன் அடைந்ததை நாங்கள் தெரிவிக்கிறோம்.

நீ அதுமாதிரி சொல்லி ஓட்டுக்கேளு. அத விட்டுட்டு ஏதேதோ பேசி மக்களைக் குழப்பி ஓட்டு வாங்கப் பார்க்கிற.

நடப்பது மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும் தேர்தல். நான் முதலமைச்சராக இருக்கிறேன். நான் சொன்னால் நடக்குமா, நீ சொன்னால் நடக்குமா. யாருக்கு காதுகுத்த பார்க்கிற. நீ கொடுத்த தேர்தல் அறிக்கை பொய். நீ ஒன்றும் செய்யப்போறதில்லை. நாங்கதான் மக்களுக்கு சொன்னதைச் செய்வோம் என்றார்.

தேர்தலுக்கு இன்னமும் 10 நாட்களே உள்ளன.

இறுதிக்கட்டப் பிரச்சாரத்தின் போதாவது மேடை நாகரிகம் வெளிப்படுமா அல்லது வார்த்தைப்போர் முற்றி விமர்சனங்கள் மேலும் தரம் தாழ்ந்து இருக்குமா என்ற ஐயம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x