Published : 11 Apr 2019 06:38 PM
Last Updated : 11 Apr 2019 06:38 PM

தேர்தல் பிரச்சாரத்தில் அன்புமணி திடீர் அழுகை: வைரலாகும் காணொலி

தேர்தல் பிரச்சாரத்தினூடே பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீரென கண்ணீர் விட்டு அழுதார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக அரசியல் கட்சிகளில் தனி நபர் ஒழுக்கம், மது, புகை பிடித்தலுக்கு எதிரான பிரச்சாரம், சுற்றுச்சூழல் குறித்து அதிகம் பேசிய கட்சி பாமக. அதன் தலைவர்கள் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரது அறிக்கையும் அதிரடியாக நாள்தோறும் வெளிவரும். தமிழக அரசியலில் முக்கியப் பங்காற்றும் கட்சியாக பாமக இருந்து வருகிறது.

வடமாவட்டங்களில் பாமக துணை இல்லாமல் வெல்ல முடியாது, பாமகவால் தோல்வியைத் தவிர்க்க முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதனால் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளிடையே மாறி மாறி கூட்டணி வைத்து கணிசமான இடங்களைப் பெற்று வந்தது பாமக.

சி.வி.சண்முகம் மீதான தாக்குதல், அதிமுக தொண்டர் கொல்லப்பட்ட வழக்கு சம்பந்தமாக ஜெயலலிதா பிடிவாதமாக வாபஸ் வாங்க மறுத்ததால் அதிமுக உடனான கூட்டணியை முறித்தது பாமக. அதன் பின்னர் 2014-ம் ஆண்டு பாஜக அணியில் தேர்தலைச் சந்தித்ததால் திமுகவுடனும் உறவு முறிந்தது.

2016 சட்டப்பேரவை தேர்தலின்போது இனி திராவிடக் கட்சிகளுடன் எந்நாளும் கூட்டணி இல்லை, வேண்டுமானால் பத்திரம் எழுதித் தரவா? என்றெல்லாம் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். அதிமுகவை கடந்த 3 ஆண்டுகளாக கடுமையாக விமர்சித்தது பாமக.

அதிமுக ஆட்சியின் ஊழல், நிர்வாகத் திறமையின்மை, மத்திய அரசுக்குப் பணிந்து போகிறது என கடுமையான விமர்சனத்தை பாமக முன்வைத்தது.

இந்நிலையில் திடீரென அதிமுகவுடன் கூட்டணி வைத்தது பாமக. இது சமூக வலைதளங்களிலும், பொதுமக்களிடையேயும், மாற்றுக் கட்சியினரிடையேயும் கடுமையான விமர்சனத்தை அளித்தது. ஏன் சேர்ந்தோம் என செய்தியாளர் சந்திப்பை அன்புமணி ராமதாஸ் நடத்த அங்கு செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் கோபப்பட்டார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊழல்வாதியா? இல்லையா? (Sey yes or no) ஆமாம் இல்லை ஒரே வரியில் சொல்லுங்கள் எனக்கேட்க பிரஸ்மீட்டை முடித்துவிட்டு எழுந்து சென்றார் அன்புமணி. அதன்பின்னர் அவரால் பிரச்சாரங்களில் பெரிதாகப் பேச முடியாத நிலை ஏற்பட்டது.

தருமபுரியில் அதிமுக தொண்டர் ஒருவர் எட்டுவழிச்சாலையை எதிர்த்துவிட்டு இப்போது ஏன் எங்களிடம் வந்து இணைந்துள்ளீர்கள் என கேட்டது சர்ச்சையானது. இந்நிலையில் தருமபுரியில் அன்புமணி ராமதாஸின் வெற்றி ’‘கேக் வாக்காக’  (CAKE WALK) இருக்காது. முள் பாதையாகத்தான் இருக்கும் என்று ஊடகங்கள், அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கடகத்தூர் என்ற பகுதியில் அன்புமணி பிரச்சாரம் செய்தார். அப்போது திடீரென, ''என் மீது இந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கும் உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்'' என தழுதழுத்த குரலில் கூறி, கண்ணீர்விட்டு அழுதார்.

அப்போது கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் அழாதீர்கள், அழாதீர்கள் என்று கூச்சலிட்டனர். தனது கண்ணீரைக் கட்டுப்படுத்த மைக் சுவிட்சை அணைப்பதுபோல் தலையைக் குனிந்து கொண்டார் அன்புமணி. ஆனாலும் அவரது முகத்தில் அழுகையின் பிரதிபலிப்பு தெரிந்தது.

அன்புமணி கண்ணீர் விடும் காட்சி அடங்கிய காணொலி ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x