Published : 30 Apr 2019 10:53 AM
Last Updated : 30 Apr 2019 10:53 AM

ஓபிஎஸ் பாஜகவில் ஏற்கெனவே இணைந்துவிட்டார்: தங்க தமிழ்ச்செல்வன் விமர்சனம்

மே 23 ஆம் தேதிக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் பாஜகவின் அங்கமாவார்கள் என, அமமுக செய்தித் தொடர்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடியின் வேட்பு மனு தாக்கலுக்காக, சமீபத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன் மகன் மற்றும் மனைவி என குடும்பத்தினருடன் வாரணாசி சென்றிருந்தார். இதுகுறித்து அமமுகவின் செய்தித் தொடர்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஏற்கெனவே விமர்சித்திருந்தார்.

அப்போது, "தன்னை அடிமைப்படுத்தி, தன் சுயநலத்திற்காக ஓ.பன்னீர்செல்வம் வாரணாசி சென்றது கண்டிக்கத்தக்கது. தன் மகன் மக்களவைத் தேர்தலில் தோற்றுவிடுவார் என்பதால், பாஜகவில் மாநிலங்களவை எம்பி பதவி மற்றும் அமைச்சர் பதவியை ஓபிஎஸ் கேட்டதாக தகவல் உள்ளது. தான் பாஜகவில் இணைந்துகொள்வதாகவும், தனக்கு ஆளுநர் பதவி தாருங்கள் என பாஜவிடம் ஓபிஎஸ் கேட்டதாகவும் தகவல் உள்ளது", என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதில் அளித்திருந்த ஓ.பன்னீர்செல்வம், "தர்மயுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்து தங்க தமிழ்ச்செல்வனின் கருத்துகளுக்கு நான் பதில் சொல்வதில்லை. இப்போது அவர் கூறிய கருத்துகள் அடிமுட்டாள்தனமானது" என தெரிவித்தார்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கருத்து குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) பதிலளித்த தங்க தமிழ்ச்செல்வன், "ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணையப் போவதாக தவறாக சொல்லிவிட்டேன். அவர் ஏற்கெனவே இணைந்துவிட்டார். குடும்பத்துடன் பாஜகவில் சேருவதற்காகத்தான் வாரணாசி சென்றிருக்கிறார். மே 23 ஆம் தேதிக்குப் பிறகு ஓபிஎஸ் குடும்பம் பாஜகவின் அங்கமாகும். இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

பாஜகவுடன் ஏற்கெனவே தொடர்பு வைத்திருந்ததால் தான் நாங்கள் அவரை முதல்வர் பதவியிலிருந்து இறக்கினோம்"என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x