Last Updated : 09 Apr, 2019 10:57 AM

 

Published : 09 Apr 2019 10:57 AM
Last Updated : 09 Apr 2019 10:57 AM

பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு ஓய்வூதியம்.. பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது என்ன?

காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்குப் போட்டியாக பல்வேறு கவர்ச்சிகரமான, முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கவர்ச்சி அறிவிப்புகள் ஏதுமின்றி பாஜக தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்.11-ல் தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்.18-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தேசியக் கட்சியான காங்கிரஸ் சார்பில் ஏப்.2-ல் தேர்தல் அறிக்கை வெளியானது. அதில் விவசாயக் கடன் தள்ளுபடி, தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து, நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும், ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய், 5 ஆண்டுக்கு 3,60,000 ரூபாய் வழங்கப்படும் , விவசாயத்துறைக்கு தனி பட்ஜெட், தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை, 2030-க்குள் வறுமை முழுமையாக நீக்கப்படும், பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்துக்கு 3 சதவீதம், கல்விக்காக 6 சதவீதம் ஒதுக்கப்படும் என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப் பட்டிருந்தது.

இதில் விவசாயக் கடன் தள்ளுபடி, ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கப்படும் என்ற அறிவிப்புகள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கியிருப்பதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவின் தேர்தல் அறிக்கை காங்கிரஸ் தேர்தல் அறிக் கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களுடன் இருக்கும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் முதல் கட்டத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத்சிங் நேற்று வெளியிட்டார்.

அதில் 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடனுக்கு வட்டி கிடையாது, 60 வயதான சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும், சிறு விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும், தூய்மை இந்தியா திட்டத்தில் நூறு சதவீத தூய்மை எட்டப்படும், ஜிஎஸ்டி நடைமுறைகள் எளிமையாக்கப்படும், முத்தலாக் தடைச் சட்டம் நிறைவேற்றப்படும், ராமர் கோயில் கண்டிப்பாக கட்டப்படும், நதிகள் இணைப்பு திட்டத்துக்கு தனி ஆணையம் அமைக்கப்படும், மக்களவை, பேரவைகளில் பெண் களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும், தீவிரவாதத்துக்கு எதிராக உடனடியாக நடவடிக் கைகள் எடுக்கப்படும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில், பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு நீக்கப்படும் என்பது பாஜக தொடங்கிய நாளில் இருந்து ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் தவறாமல் இடம் பெறும் அறிவிப்புகள்தான். கடந்த 5 ஆண்டுகளாக பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்தும் நிறைவேற்றப்படாத இந்த வாக்குறுதிகள் நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதியாகவே இடம் பெற் றுள்ளன.

பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை ஆகியன இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றுள்ளன.

இதுதவிர, தூய்மை இந்தியா திட்டம், முத்தலாக் சட்டம், அனைவருக்கும் வீடு, புதிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆகியவை செயல்பாட்டில் இருந்துவரும் திட்டங்களாகும். நதி நீர் இணைப்பும் கடந்த தேர்தலில் அறிவித்ததே. விவசாயக் கடன்களுக்கு வட்டி இல்லை, 60 வயதுக்கு மேற்பட்ட விவசா யிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது மட்டுமே புதிய அறிவிப்புகளாக இடம் பெற்றுள்ளன.

இது குறித்து மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சசிராமன் கூறுகையில், பாஜக ஆட்சியில் எந்தத் திட்டங்களால் மக்கள் அதிகம் பலனடைந்துள்ளார்களோ, அந்தத் திட்டங்களை விரிவுபடுத்தவும், அந்தத் திட்டங்களுக்கான கட்டமைப்புகளைப் பெருக்குவதற்குமான அறிவிப்புகளும் இடம் பெற்றுள்ளன. மேலும், அனைத்துத் தரப்பினருக்குமான அறிவிப்புகள் உள்ளன. மக்களின் நாடித்துடிப்பை அறிந்து மிக கவனமாக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைப் போல் நிறைவேற்ற முடியாத திட்டங்களை பாஜக அறிவிக்கவில்லை, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x