Published : 16 Apr 2019 10:22 AM
Last Updated : 16 Apr 2019 10:22 AM

ஸ்ரீபெரும்புதூரில் வெல்லப் போவது யார்? திமுக - பாமக கணக்கு பலிக்குமா?

தமிழகத்தில் அதிகளவில் பன்னாட்டுத் தொழிற்சாலைகள் கொண்டுள்ள ஸ்ரீபெரும்புதூர், தொழில் துறையின் தலைநகராக விளங்குகிறது. சென்னை புறநகரில் அதிகமானோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதும் இந்தத் தொகுதிதான்.

வரும் மக்களவைத் தேர்தலில், ஸ்ரீபெரும்புதூரில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் ஏ. வைத்திலிங்கம், அமமுக வேட்பாளர் தாம்பரம் நாராயணன், மக்கள் நீதி மய்யம் சார்பில் எம்.ஸ்ரீதர், நாம் தமிழர் கட்சி சார்பில் எச்.மகேந்திரன்,பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அந்தோணி, 11 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 19 பேர் போட்டியிடுகிறார்கள்.

இத்தொகுதியில் செங்கல்பட்டு -பெருங்களத்தூர், கோயம்பேடு -ஸ்ரீபெரும்புதூர் சாலைகள் போக்குவரத்து நெரிசலால் தினமும் திக்குமுக்காடுகின்றன. இங்குள்ள தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப் படும் வாகனங்கள், பொருட்களை துறைமுகத்துக்கு கொண்டு செல்ல வசதியாக சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். இத்தொகுதியில் பன்னோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. 2015-ம் ஆண்டு பெருமழையின்போது பாதிப்பை ஏற்படுத்திய அடையாறு கால்வாய் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கட்சியும், பிரச்சார வியூகங்களும்

திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலு இத்தொகுதியில் நன்கு அறிமுகமானவர். கடந்த 2009-ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்தார். தற்போது, கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் உள்ளிட்ட மேம்பாலங்கள், சாலை விரிவாக்கத் திட்டம், தாம்பரம் 3-வது ரயில் முனையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளை முன்வைத்தும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதேபோல் ஸ்ரீபெரும்புதூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பிள்ளைப்பாக்கத்தில் ரூ.600 கோடியில் உள்நாட்டு துறைமுகம் அமைக்கப்படும் எனக் கூறியும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் பாமக வேட்பாளர்ஏ.வைத்திலிங்கம், பிரச்சாரத்தின்போது டி.ஆர்.பாலு கடந்த 2009 வெற்றி பெற்று, தொகுதிக்கு ஒன்றும் செய்யாததினால் சொந்த ஊரில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது மீண்டும் இங்கு போட்டியிட வந்திருக்கிறார்.  டி.ஆர்.பாலு சாராய தொழிற்சாலை நடத்துகிறார். நான் மருத்துவ சேவை செய்கிறேன் எனக்கூறி பிரச்சாரம் செய்கிறார்.

அமமுக சார்பில் போட்டியிடும் தாம்பரம் நாராயணன், தாம்பரத்தை தவிர்த்து, மற்ற இடங்களில் பொதுமக்களிடம் அதிகமாக அறிமுகம் இல்லாதவர். இவர் மீது பெரிய அளவில் குற்றச்சாட்டு இல்லாதது பலம். தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் இடங்களில் திமுகவுக்கு இணையாக தொண்டர்கள் வருகின்றனர். அதிமுகவில் இருந்து விலகிய சில முக்கிய கட்சி நிர்வாகிகள் அமமுகவில் உள்ளனர். சில இடங்களில் இவர்கள் மேற்கொள்ளும் பிரச்சாரம் திமுக, பாமக-வை மிஞ்சும் வகையில் இருப்பதை பார்த்து மக்கள் வியக்கிறார்கள்.

டி.ஆர். பாலுவும், தாம்பரம் நாராயணனும் தஞ்சை மாவட்டத்தை சார்ந்தவர்கள். மேலும் தஞ்சை மாவட்டம், வடசேரியில் சாராய தொழிற்சாலை அமைக்க கூடாது, என  பாலுவுக்கு எதிராக கிராம மக்கள் நடத்திய போராட்டத்தில் தாம்பரம் நாராயணன் தலைமையேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்.  பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் இந்த சம்பவங்களை கூறி வருகிறார். மேலும் சமூக வலை தளங்களிலும் வேகமாக  சாராய ஆலை போராட்டங்கள் தொடர்பான வீடியோ, படங்களை பரவவிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதேபோல், மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இளைஞர்களையும், புதிய வாக்காளர்களையும் கவரும் வகையில் மாற்று அரசியலை முன்னிலைப்படுத்தியும், அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்து கூறியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தீவிரமாக இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக அமமுகவும், பாமகவும் உள்ளது. மும்முனை போட்டி இருந்தாலும் முன்னாள் மத்திய அமைச்சர் டி,ஆர்.பாலு பிரபலமானவராக இருக்கிறார். அவரின் வளர்ச்சி திட்டங்கள் மக்கள் மத்தியில் இன்னும் பேர் சொல்லும்படியாக பேசப்பட்டும் வருகிறது. இது அவருக்கு அதிகளவு வெற்றி வாய்ப்பை கொடுக்கும் என அவரின் கட்சியினர் நம்புகின்றனர். 

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு கணிசமான வாக்குகள் இருப்பதால், அரசுத் திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதிகளை வைத்து வெற்றி பெறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மற்ற கட்சிகள் கணிசமான அளவு வாக்குகளை பிரித்தாலும், வெற்றியை  அடைய  திமுக மற்றும் பாமகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

விஜபி தொகுதி என்பதால்  இத்தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x