Last Updated : 08 Mar, 2019 09:55 AM

 

Published : 08 Mar 2019 09:55 AM
Last Updated : 08 Mar 2019 09:55 AM

குத்துச்சண்டையில் கலக்கும் மாணவர்!- தேசியப் போட்டியில் தங்கம் வென்று சாதனை

தேசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார் கோவை மாணவர். புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய ஊரக விளையாட்டுப் போட்டியில், நாடு முழுவதுமிருந்து 400-க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில், 63-66 கிலோ எடைப் பிரிவில் ஹரியானா வீரரை வீழ்த்தி தங்கம் வென்றார் கோவை மாணவர் எஸ்.எஸ்.தர்ஷன்.

தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளார் இவர்.  2018 நவம்பரில் சென்னை யில் நடைபெற்ற மாநில குத்துச்சண்டைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2017 டிசம்பரில் நடைபெற்ற ஊரக விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

“எனக்கு சொந்த ஊர் கோவை செல்வபுரம். பெற்றோர் செந்தில்குமார்-சுபா. வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் எலெக்ட்ரிகல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் 2-ம் ஆண்டு டிப்ளமோ படித்து வருகிறேன்.

சிறு வயதில் தொலைக்காட்சியில் குத்துச்சண்டை போட்டிகளைப் பார்த்து ரசிப்பேன். அப்போதிருந்து இந்த விளையாட்டில் எனக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. எங்கு குத்துச்சண்டை போட்டி நடைபெற்றாலும், அங்கு சென்றுவிடுவேன்.  ஒருகட்டத்தில், நானும் குத்துச்சண்டை கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது.

கோவை நேரு விளையாட்டு அரங்கில் குத்துச்சண்டை பயிற்சி அளிக்கப்படுவதாக அறிந்து, அங்கு சென்று வீரர்கள் பயிற்சி செய்வதைப் பார்த்தேன்.  கைகளில் உறைகளை மாட்டிக்கொண்டு, மூட்டைகளைக் குத்தி பயிற்சி செய்து கொண்டிருந்தனர் வீரர்கள். இவர்களைப்போல நானும் பயிற்சி பெற வேண்டுமென்ற ஆர்வம் அதிகரித்தது.

பின்னர், பயிற்சியாளர்கள் மயில்சாமி, நந்தகுமார் ஆகியோரை அணுகி, குத்துச்சண்டை பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கினேன்.

கொஞ்சம் கொஞ்சமாக போட்டியில் பங்கேற்கவும் செய்தேன். பள்ளியில் படிக்கும்போது, பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சார்பில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் எனக்கு 6-வது இடம் கிடைத்தது.

பெற்றோரும், உறவினர்களும் அளித்த உற்சாகம், அடுத்த ஆண்டு நடைபெற்ற மாநில குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லச் செய்தது.  தற்போது முதல்முறையாக தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் வென்றுள்ளேன். கல்லூரி முதல்வர் பி.எல்.சிவக்குமார், உடற்கல்வி இயக்குநர் சண்முகவேல் ஆகியோர் பெரிதும் ஊக்கமளித்தனர். சர்வதேச அளவிலான போட்டியில்  பதக்கம் வென்று, நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டுமென்பதே எனது லட்சியம்” என்றார் மாணவர் எஸ்.எஸ்.தர்ஷன் தன்னம்பிக்கையுடன்.

உயர் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும்!

குத்துச்சண்டை பயிற்சியாளரும், கோவை சூப்பர் பாக்சர்ஸ் அகாடமி செயலருமான எஸ்.நந்தகுமார் கூறும்போது, “பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்குச் சென்று, குத்துச்சண்டை பயிற்சி அளித்து, போட்டிகளையும் நடத்தினோம். தொடர் பயிற்சியால் ஏராளமான வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் வென்றுள்ளனர். அஷ்வின், ரஷிகா, பிரதிக்சா, தரணி பிரியா, யுரேகா போன்றோர் தேசிய போட்டிகளில் சாதித்து வருகின்றனர்.

குத்துச்சண்டை போட்டி தற்காப்புக்கலை என்பதுடன், உடலுக்கு ஆரோக்கியமும் அளிக்கிறது. உயர் படிப்புகளுக்கான  இடஒதுக்கீட்டில் குத்துச்சண்டை வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், ரயில்வே, காவல் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளில் குத்துச்சண்டை வீரர்கள்  வேலைவாய்ப்பும் பெறுகின்றனர். ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற்றுள்ளதால், சர்வதேச அளவிலான அங்கீகாரமும் கிடைக்கிறது. இந்த விளையாட்டில் போட்டியும் குறைவு என்பதால், வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x