Last Updated : 11 Sep, 2014 11:09 AM

 

Published : 11 Sep 2014 11:09 AM
Last Updated : 11 Sep 2014 11:09 AM

ரேடியோ அலைவரிசை மூலம் துறைமுகத்தை கண்காணிக்க திட்டம்: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்

சென்னை துறைமுகத்தின் பாதுகாப்பை பலப்படுத்தவும், கன்டெய்னர் லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணவும், ரேடியோ அலைவரிசை கருவி மூலம் கண்காணிக்கும் புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம், இத்திட்டத்தை செயல்படுத்தும் நாட்டின் இரண்டாவது துறைமுகம் என்ற பெருமையை சென்னை துறைமுகம் பெறுகிறது.

சென்னை துறைமுகத்துக்கு நாளொன்றுக்கு இரண்டாயிரத் துக்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் வந்து செல்கின்றன. இதனால் துறைமுகத்துக்குள்ளும் வெளியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலைக் குறைக்க துறைமுக நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ரேடியோ அலைவரிசை கண்காணிப்பு சாதனம் மூலம், துறைமுகத்துக்குள் கன்டெய்னர் லாரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான, அடிப்படை பணிகளை துறைமுக நிர்வாகம் தொடங்கியுள் ளது. இதுகுறித்து, துறைமுக அதிகாரி ஒருவர், ‘தி இந்து’விடம் கூறியதாவது: துறைமுகத்துக்குள் சரக்கை எடுத்துவரும் சில லாரி டிரைவர்கள், துறைமுகத்துக்குள் சரக்கை இறக்கிய பிறகும் லாரியை வெளியே கொண்டு செல்லாமல் அங்கேயே நிறுத்தி விடுகின்றனர். சிலர் ஒரு நாளைக்கு மட்டும் அனுமதி (பாஸ்) பெற்று விட்டு ஒருமாதம் வரை லாரியை துறைமுகத்துக்குள் நிறுத்தி விடுகின்றனர்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விதத்தில், ரேடியோ அலைவரிசை மூலம் கன்டெய்னர் லாரிகளை கண்காணிக்கும் கருவியை பொருத்த தீர்மானித்துள்ளோம். இதன்படி, துறைமுகத்துக்குள் நுழையும் லாரிகளுக்கு ஒரு ‘டேக்’ வழங்கப்படும். அதில், லாரியின் பதிவெண், டிரைவரின் பெயர், விலாசம், புகைப்படம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும்.

துறைமுகத்துக்குள் வருவதற்கான அனுமதி சீட்டை வாங்கும் போதே, இந்த டேக் டிரைவருக்கு வழங்கப்படும். துறைமுகத்துக்குள் வரும் போது, அங்கு பொருத்தப்பட்டுள்ள ரீடர் மற்றும் மானிட்டர் கருவிகள் மூலம் லாரிகள் கண்காணிக்கப்படும். இதன் மூலம், சட்டவிரோதமான முறையில் லாரிகள் துறைமுகத் துக்குள் நுழைவது தடுக்கப்படும்.

அதேபோல், அனுமதி வழங்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் நிற்கும் வாகனங்களை கண்டறிந்து அவற்றை வெளியேற்ற முடியும். இதன் மூலம், துறைமுகத்தின் பாதுகாப்பு பலப்படுவதுடன் போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு ஏற்படும். இதற்கான அடிப்படை சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கான பணிகள் தனியார் நிறுவனம் ஒன்றிடம் அளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அளிக்கும் அறிக்கை யின் அடிப்படையில், இதற்கான டெண்டர் விடப்படும். ஆறு மாதங்க ளுக்குள் இத்திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தை செயல்படுத்தும் நாட்டின் இரண்டாவது துறைமுகம் என்ற பெருமையை சென்னை துறைமுகம் பெறும்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x