Published : 05 Mar 2019 01:57 PM
Last Updated : 05 Mar 2019 01:57 PM

ரூபாய் 2000 நிதியுதவி: அரசு நிதியிலிருந்தே வாக்காளர்களுக்குப் பணம்; கே.எஸ்.அழகிரி விமர்சனம்

தமிழக அரசின் 2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவித் திட்டம், வாக்காளர்களைக் கவருவதற்காக அரசு நிதியிலிருந்தே அவர்களுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசு சிறப்பு நிதியாக வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக அறிவித்து சுமார் 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படுகிற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூபாய் 1,200 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளிவர இருக்கிற ஒருசில நாட்களுக்கு முன்பாக வாக்காளர்களைக் கவருவதற்காக இந்தத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் அதிமுக நிதியிலிருந்து வாக்காளர்களின் வாக்குகளைப் பெற கொடுக்கப்படுகிற நிதிக்குப் பதிலாக அரசு நிதியிலிருந்தே வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுகிறது என்பதை விட கொடூரமான நிகழ்வு வேறு எதுவும் இருக்க முடியாது.

கடந்த பல ஆண்டுகளாக தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காத மக்கள் விரோத அதிமுக அரசும், மத்திய அரசும் இணைந்து இத்தகைய திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. ஆனால், மத்திய - மாநில அரசுகள் வழங்குகிற உதவி நிதி எந்த நோக்கத்திற்காக கொடுக்கப்படுகிறது என்பதை வாக்காளர்கள் அறியாதவர்கள் அல்ல.

தமிழகத்தின் நிதிநிலையைப் பொறுத்தவரை ஏறத்தாழ 3 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் இருக்கிறது. இது மாநில மொத்த உற்பத்தியில் 23 சதவீதமாகும். தமிழக மக்கள் ஒவ்வொருவரின் மீதும் ரூபாய் 55 ஆயிரம் கடன் சுமையை அதிமுக அரசு சுமத்தியிருக்கிறது. கடனுக்காக வட்டி மட்டும் ஆண்டுதோறும் 33 ஆயிரத்து 226 கோடி ரூபாய் செலுத்தி வருகிறது.

இத்தகைய திவாலான நிலையில் இருக்கிற அதிமுக அரசு தமிழக மக்களின் வறுமையைப் போக்குவதற்கு எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதால் இத்தகைய தற்காலிக கவர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழக அரசு நிறைவேற்றுகிற திட்டத்தில் பல குளறுபடிகள் இருக்கின்றன. குறிப்பாக தமிழகத்தில் 71 லட்சம் சிறு, குறு விவசாயிகள் இருக்கிறார்கள். இதில் குத்தகை விவசாயிகள் 25 லட்சம் பேர் இதில் விடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் கோயில் நில குத்தகைதாரர்கள் மூன்றரை லட்சம் விவசாயிகளும் இருக்கிறார்கள். இப்படி பார்க்கிற போது பாதி விவசாயிகளுக்கு உதவித் தொகை  மறுக்கப்பட்டு வருகிறது.

வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதாக கூறுகிற தமிழக அரசிடம் அதற்கான புள்ளிவிவரம் இருக்கிறதா? வறுமைக் கோட்டுக்குக் கீழாக வாழ்பவர்களுக்கு என்ன அளவுகோல்? இவர்கள் விவசாயத் தொழிலாளர்களா அல்லது வேறு எந்த வகை தொழிலாளர்கள்? இதை அறிந்து கொள்ள நிபுணர் குழு அமைக்கப்பட்டதா? ஏனோ தானோ என்று தேர்தல் நெருங்குகிற நேரத்தில் மக்களை மயக்கி, உதவித் தொகை வழங்கி வாக்குகளைப் பறிக்கிற முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.

அதேபோல, தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் ஒரு கோடி பேருக்கு மேல் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு இல்லாமல் அலைந்து கொண்டிருப்பதைப் பற்றி எடப்பாடி பழனிசாமி அரசு ஏன் கவலைப்படவில்லை? குறிப்பாக 2.45 லட்சம் பொறியாளர்கள், 4,307 மருத்துவர்கள் என பதிவு செய்து விட்டு பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பில்லாமல் எதிர்காலமே கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள்.

சமீபத்தில் வெளிவந்த புள்ளிவிவரத்தின்படி நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் அந்நிய நேரடி முதலீட்டில் தமிழகத்தின் பங்களிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. மற்ற மாநிலங்கள் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் வெற்றி பெற்று வருகிற நிலையில், அகில இந்திய அளவில் தமிழகத்தின் பங்களிப்பு முந்தைய ஆண்டில் 18 சதவீதமாக இருந்தது நடப்பாண்டில் 14 சதவீதமாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூபாய் 14 ஆயிரத்து 166 கோடி. இது முந்தைய ஆண்டை விட 26 சதவீதம் குறைவு. இதற்கு என்ன காரணம் எனில் தமிழகத்தின் ஆட்சியாளர்கள் தொலைநோக்குப் பார்வையில்லாமல் வளர்ச்சியை நோக்கி திட்டங்களைத் தீட்டாமல் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் ஆட்சி நீடிக்கிற வரை தமிழகத்தில் வளர்ச்சி என்பது கானல் நீராகத் தான் இருக்கப் போகிறது.

தமிழகத்தில் உயர்நிலை அதிகாரிகளைப் பணிமாற்றம் செய்வதில் இடைத்தரகர்கள் மூலமாக லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்று செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் அரசு நிர்வாகம் முடங்கிப் போகிற நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குகிற நேரத்தில் இத்தகைய பணி மாற்றங்களை தமிழக முதல்வர் தவிர்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, வருகிற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் சேர்ந்து நடந்தால் அதில் மத்திய - மாநில அரசுகளுக்குப் பாடம் புகட்டுகிற வகையில் அதிமுகவின் கவர்ச்சித் திட்டங்களால் மக்கள் ஏமாறாமல் விழிப்புணர்வுடன் உறுதியாக செயல்படுவார்கள் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது" என, கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x