Published : 07 Feb 2019 05:37 PM
Last Updated : 07 Feb 2019 05:37 PM

புளிப்பு மிட்டாய், கனிவான பேச்சு, திருக்குறள்: பயணிகளைக் கவரும் பேருந்து நடத்துநர்

பரபரப்பான சிங்காநல்லூர் பேருந்து நிலையம். பேருந்துகளின் ஹார்ன் ஒலி, டயர்கள் தேயும் சத்தம்... கோயம்புத்தூரில் இருந்து மதுரை செல்லும் பேருந்து புறப்படத் தயாராக இருக்கிறது. ''மதுர.. மதுர பை பாஸ்..!'' என்ற குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

தூய்மையான நீல ஆடையில் பளிச்செனச் சிரிக்கிறார் சிவசண்முகம். கக்கத்தில் கலெக்‌ஷன் பை. தொண்டையைச் செருமிக் கொள்கிறார்.

''வணக்கம்! தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துக்கு உங்களை வரவேற்கிறேன். அரசு நமக்காக அழகான பேருந்தைக் கொடுத்திருக்கிறது. அதனால் பேருந்தை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ள உதவுங்கள். எச்சில் துப்பாதீர்கள்.

பயணம் ஒத்துக்கொள்ளாதவர்களுக்கு புளிப்பு மிட்டாய் வைத்திருக்கிறேன். வாந்தி வந்தால் எடுக்கப் பையும் இருக்கிறது'' என்று உரத்த குரலில் கணீரெனச் சொல்கிறார் சிவசண்முகம். மொத்தக் கூட்டமும் கட்டுப்பட்டு நிற்கிறது.

மேலும் தொடர்கிறார்: ''பல்லடத்துக்கு 25 ரூபாய் டிக்கெட். தாராபுரத்துக்கு ரூ.57. மதுரைக்கு ரூ.170. உங்கள் எல்லோருக்கும் இந்தப் பயணத்தின் பின்னால் ஒரு காரணம் இருக்கும். அது நிறைவேறும் என்று நம்புகிறேன்.

இவர் எங்களின் ஓட்டுநர் சதாசிவம். மகிழ்ச்சியான, பாதுகாப்பான பயணத்துக்கு வாழ்த்துகள். ஏதாவது வேண்டுமென்றால் தயங்காமல் கேளுங்கள்'' என்கிறார்.

அத்துடன் விரும்பும் பயணிகளுக்கு திருக்குறளையும் சொல்கிறார்.

இந்தப் பேச்சுதான் போன வாரத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. சாதாரணமாக ஓர் நடத்துநர் தனது பயணிகளை வரவேற்பது ஏன் இத்தனை கவனம் பெறவேண்டும்?

இதுமாதிரியான பேருந்து நடத்துநர்கள் இல்லாததால்தான். தொடர்ந்து நின்றுகொண்டே பயணிப்பது, 10 மணி நேரத்துக்கும் மேலான வேலைப் பளு, வெவ்வேறு மாதிரியான பயணிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஆகியவற்றால், சுணக்கத்துடனேயே பெரும்பாலான நடத்துநர்கள் இருக்கின்றனர்.

இதனால் அவர்களின் மென்சிரிப்பு கூட அரிதாக இருக்கிறது. இந்நிலையில் பேசும் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் புன்னகைத்துக்கொண்டே இருக்கும் சிவசண்முகம் மாதிரியான நபர்கள் சமூகத்துக்குத் தேவைப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x