Last Updated : 07 Feb, 2019 05:34 PM

 

Published : 07 Feb 2019 05:34 PM
Last Updated : 07 Feb 2019 05:34 PM

கல்வி உதவித்தொகை வழங்கவில்லை என்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வு முடிவுகளை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

அனைத்து கல்லூரிகளிலும் எஸ்சி/எஸ்டி கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் அப்பிபட்டியைச் சேர்ந்த அஜித் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நாமக்கலில் உள்ள ஞானமணி பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறேன். எஸ்சி/எஸ்டி கல்வி உதவித்தொகையில் பயிலும் அனுமதியுடன் 2017-18 ஆம் ஆண்டில் கல்லூரியில் சேர்ந்தேன். அதனடிப்படையில்  2012 செப்டம்பர் 11-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 92-ன் படி கல்விக்கட்டணம் மற்றும் பிற பராமரிப்புக் கட்டணத்திற்கான தொகை எஸ்சி/எஸ்டி கல்வி உதவித்தொகையில் வழங்கப்படும். நான் எவ்விதக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை. 

கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு நடைபெற்ற நிலையில், நான் உட்பட 4 மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. எஸ்சி/எஸ்டி கல்வி உதவித்தொகை  வழங்கப்படாததால், கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக எங்களது தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும், கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை வழங்கப்படாத நிலையில், அதற்காக மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே வழங்க மத்திய சமூக நலத்துறை செயலருக்கும், தமிழக ஆதி திராவிட நலத்துறை செயலருக்கும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, எஸ்சி/எஸ்டி கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்பதற்காக தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பதை ஏற்க இயலாது. ஆகவே, அனைத்து கல்லூரிகளிலும் எஸ்சி/எஸ்டி கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட உத்தரவிடப்படுகிறது.

இது தொடர்பாக தமிழக ஆதி திராவிட நலத்துறை செயலர், அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x