Published : 11 Feb 2019 07:38 AM
Last Updated : 11 Feb 2019 07:38 AM

மத்தியில் காமராஜர் விரும்பிய ஊழலற்ற ஆட்சி: திருப்பூர் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

இரா.கார்த்திகேயன் / பெ.ஸ்ரீனிவாசன்

மத்தியில் காமராஜர் விரும்பிய ஊழல் அற்ற ஆட்சி நடைபெறுகிறது என திருப்பூரில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை என துணிச்சலுக்கும், தைரியத்துக்கும் பெயர் பெற்ற மண் இது. இவர்களின் வாழ்க்கை இந்த நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை வழங்கி கொண்டிருக்கிறது. உலக நாடுகளுக்கு உதாரணமாக திகழ்கிறது திருப்பூர். தொழில்முனைவோர் மற்றும் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் மக்களை பெற்றுள்ள பகுதி திருப்பூர். நாடு முழுவதும் உதாரணமாக திகழ்கிறது திருப்பூர்.

பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்கா

இந்திய அரசு செயல்படும் முறை மாறி உள்ளது. முந்தைய அரசு, நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு எதுவும் செய்யவில்லை. தரகர்களின் நலனுக்காக அவர்கள் செயல்பட்டு வந்தார்கள். கடல் முதல் ஆகாயம் வரை காங்கிரஸ் கட்சியில் ஊழல் இருந்தது. நாம்பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெற்றவராக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். இந்தியாவில் புதிய இரண்டு பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்காக்கள் அமைய உள்ளன. அதில் ஒன்று தமிழகத்தில் அமைய உள்ளது. இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிக அளவில் கிடைக்கும்.

நடுத்தர வர்க்கத்தின் நலனுக்கான பல திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம். ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் கொண்டிருப்பவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளோம். தமிழகத்தைச்சேர்ந்த ‘முன்னாள் மறுவாக்கு எண்ணிக்கை’ அமைச்சர் தன்னை மட்டும்அறிவாளியாக நினைத்து பேசுகிறார். நடுத்தர வர்க்க மக்களை ஏளனமாக பேசினார். அதனால்தான் அவர் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

ஊழல் இல்லாத ஆட்சி

தமிழகத்தைச் சேர்ந்த காமராஜர் ஊழல் இல்லாத ஆட்சியை விரும்பினார். அதை நாங்கள் வழங்கி வருகிறோம். ஊழல் இல்லாத ஆட்சியை, மத்திய அரசு இன்றைக்கு நாட்டுக்கு வழங்கி வருகிறது. போலி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. போலி பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர். இடைத்தரகர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஐஸ்கீரிம், ரீசார்ஜ் பேமிலி பேக்கேஜ் போல் குடும்பத்துக்கு ஜாமீன் பேக்கேஜ் பெறுகின்றனர். தமிழக மக்கள் புத்திசாலிகள். அவர்கள் கலப்பட கூட்டணியை விரும்பமாட்டார்கள். மக்கள் தூக்கி எறிவார்கள். பணக்காரர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். அவர்களின் நோக்கம் குடும்பம் மற்றும் வாரிசு அரசியலை முன்னிறுத்துவதுதான்.

அனைவருக்கும் சமமான வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம்.

பொதுப்பிரிவு ஏழை மக்களுக்கு10 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கினோம். இதன்மூலமாக ஏற்கெனவேஉள்ள பட்டியல், மலைவாழ், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு எந்தவிதத்திலும் இடஒதுக்கீடு பாதிக்கப்படாது. சமூக நீதி என்பது கணிதம் அல்ல. அதுநம்பிக்கையின் வெளிப்பாடு. சமூகநீதிக்கு எதிராக பாஜக செயல்படவில்லை. திமுக, காங்கிரஸும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை நீக்கினார்கள். வாஜ்பாய் அரசு அதனை மீண்டும் கொண்டு வந்தது என்றார்.

திட்டங்கள் தொடங்கிவைப்பு

முன்னதாக திருப்பூர் வந்த பிரதமர், பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த இடம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையிலிருந்து மத்திய அரசின் திட்டங்களை தொடங்கிவைத்தார். திருப்பூரில் 100 படுக்கைவசதிகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை, சென்னை மற்றும்திருச்சி விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை கே.கே. நகரில் இ.எஸ்.ஐ.சி. மருத்துவக் கல்லூரி மற்றும் 470 படுக்கை வசதிகளுடன் கூடிய இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனை, எண்ணூரில் கடற்கரை துறைமுகம், சென்னை துறைமுகம் முதல் மணலி சுத்திகரிப்பு நிலையம் வரை புதிய கச்சா எண்ணெய் குழாய் பதிப்பு திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சென்னை மெட்ரோ முதல்கட்ட பயணிகள் சேவையையும்கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணையமைச்சர் பொன்.

ராதாகிருஷ்ணன், திருப்பூர் மக்களவை உறுப்பினர் வி.சத்யபாமா,தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக கோவை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடக்கும் இடத்துக்கு மாலை 3.10 மணிக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். அவர் வந்த ஹெலிகாப்டருக்கு பாதுகாப்பாக மேலும் இரு ஹெலிகாப்டர்கள் விழா நடைபெறும் மேடை அருகே அடுத்தடுத்து வந்திறங்கின. ஹெலிபேட் பகுதியிலிருந்து குண்டு துளைக்காத காரில் மாலை 3.15 மணிக்கு மேடைக்கு வந்த பிரதமர் திட்டங்களைத் தொடங்கி வைத்து, 3.24 மணிக்கு விழா மேடையிலிருந்து இறங்கி பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு குண்டு துளைக்காத காரில் புறப்பட்டு சென்றார்.

கூட்டணி பற்றி பேசவில்லை

பிரச்சாரத்தில் திமுக மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை பெயர் சொல்லாமல் குறிப்பிட்டு சாடிய பிரதமர் மோடி, ஆளுங்கட்சி குறித்து எதுவும் பேசவில்லை. மாநில அரசு குறித்தும் எவ்வித விமர்சனமும் வைக்கவில்லை. கூட்டணி தொடர் பாக ஏதேனும் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டணி குறித்து பிரதமர் எதுவும் பேசவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x