Last Updated : 08 Feb, 2019 07:42 PM

 

Published : 08 Feb 2019 07:42 PM
Last Updated : 08 Feb 2019 07:42 PM

புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியது காங்கிரஸ்: சபாநாயகர் போட்டியிட வாய்ப்பு?

புதுச்சேரி மக்களவைத்  தேர்தலில் போட்டியிடுவதை காங்கிரஸ் உறுதிப்படுத்தியுள்ளது. தேர்தலுக்காக ஆறு தனித்தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் சபாநாயகர் வைத்திலிங்கம் வேட்பாளராக நிறுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள சூழலில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முக்கியக் கட்சிகள் தொடங்கியுள்ளன.  புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி உறுதியாகியுள்ள சூழலில் இத்தொகுதி யாருக்கு என்று கேள்வி எழுந்தது. காங்கிரஸ் வலுவாக உள்ள புதுச்சேரியில் திமுகவும் போட்டியிட ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் பரவின.

திமுக வேட்பாளர் மக்களவைத் தேர்தலில் நிறுத்தப்பட உள்ளதாக கட்சிகள் வட்டாரத்தில் கருத்துகள் பரவி வந்தன. அதே நேரத்தில் காங்கிரஸ் பூத் கமிட்டிகளை முன்கூட்டியே அமைத்தது.  அதைத்தொடர்ந்து தற்போது மக்களவைத் தேர்தலுக்காக  பணிக்குழுக்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடுவதை முன்கூட்டியே உறுதி செய்துள்ளது.

தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்புக்குழு தலைவராக முதல்வர் நாராயணசாமியை கட்சித் தலைமை நியமித்துள்ளது. இக்குழுவில் மாநிலத் தலைவர் நமச்சிவாயம் உட்பட 21 பேர் இடம் பெற்றுள்ளனர். அத்துடன் பிரச்சார குழு, விளம்பரக்குழு, மீடியா ஒருங்கிணைப்புக்குழு  உட்பட ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வேட்பாளர் தேர்வுக்குழு பரிந்துரைக்கும் மூவர் கொண்ட பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைமையானது சக்தி செல்போன் ஆப் மூலம் தொண்டர்கள் கருத்து அறிந்து வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார்.

இதற்காக புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் சக்தி செல்போன்ஆப் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சேர்க்கை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் யார் என்பது தொடர்பாக கட்சி உயர் வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் சபாநாயகர் வைத்திலிங்கம், டெல்லி பிரதிநிதி ஜான்குமார், முன்னாள் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் ஆகியோர் பரிசீலனையில் உள்ளனர். அதில் சபாநாயகர் வைத்திலிங்கம் போட்டியிடவே அதிக வாய்ப்பு உள்ளது.

காங்கிரஸ் தலைமையானது முதல்வர் நாராயணசாமியையும், சபாநாயகர் வைத்திலிங்கத்தையும் அண்மையில் டெல்லி அழைத்தது. இருவரும் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் பரவியது. தற்போது தேர்தல் பணிக்குழுவில் முதல்வர் பெயர் இடம் பெற்றுள்ளதால் அவர் போட்டியிட வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அதனால் சபாநாயகர் வைத்திலிங்கமே இம்முறை காங்கிரஸ் வேட்பாளராக பெரும் வாய்ப்புள்ளது" என்று கட்சி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x