Last Updated : 13 Feb, 2019 10:09 AM

 

Published : 13 Feb 2019 10:09 AM
Last Updated : 13 Feb 2019 10:09 AM

அரசு விருது பெற்ற மாநகராட்சிப் பள்ளியில் போதிய கழிப்பறையின்றி மாணவிகள் அவதி: கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணியை விரைவுபடுத்த கோரிக்கை

திருச்சி மாவட்ட அளவில் சிறந்த பள்ளி விருது பெற்ற மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் போதிய கழிப்பறை இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருச்சி பீமநகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 160 மாணவர்கள், 99 மாணவிகள் என 250 பேர் படித்து வருகின்றனர். மேலும், இந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள 2 அங்கன்வாடிகளில் மேலத்தெரு, பென்ஷனர் காலனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 38 குழந்தைகளும் படித்து வருகின்றனர்.

2016- 2017-ம் ஆண்டு மாவட்ட அளவில் சிறந்தப் பள்ளியாக விருது பெற்ற இந்தப் பள்ளியில், கடந்தாண்டு மே மாதம் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி தொடங்கியது. மிகவும் மந்தகதியில் நடைபெற்று வரும் இப்பணியால், பல்வேறு வழிகளில் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக பெற்றோர் தரப்பில் ஹமீம், ஜெஸ்னா மற்றும் பள்ளித் தரப்பினர் கூறியதாவது:இப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்காக பள்ளி வளாகத்தில் இருந்த 5 கழிப்பறைகள் இடிக்கப்பட்டன. மேலும், அங்கன்வாடி இயங்கிய கட்டிடத்தின் மேற்பகுதியில் புதிய கட்டிடப் பணிகள் நடைபெறுவதால், இப்பள்ளி வகுப்பறைக்கே அங்கன்வாடி மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கழிப்பறைகள் இடிக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் கழிப்பறைக்குச் செல்ல முடியாமல் அவதிக்குள் ளாகி வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றதை யடுத்து, பள்ளிக்கு அருகேயுள்ள பொதுக் கழிப்பிடத்தில் உள்ள 4 கழிப்பறைகளை பள்ளிக்கு ஒதுக்கித் தந்தனர். ஆனாலும், போதிய எண்ணிக்கையில் கழிப்பறைகள் இல்லாததாலும், பொதுக் கழிப்பிடம் என்பதாலும் அவற்றைப் பயன்படுத்த மாணவிகள் பலர் தயங்குகின்றனர். இதனால், மாணவிகள் உடல் நலன் பாதிக்கப்படுகின்றனர்.

இதுதவிர, பள்ளி முன் உள்ள சாக்கடை பல ஆண்டுகளாக தூர் வாரப்படாததால், எந்நேரமும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, “மாநகராட்சியின் கல்வி நிதி ரூ.70 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி தாமதமாகிறதா என்பதை ஆய்வு செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். இப்பணி களை விரைவுபடுத்தி முடிக்கவும், பள்ளி முன் உள்ள சாக்கடையைத் தூர் வாரவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x