Last Updated : 04 Jan, 2019 05:42 PM

 

Published : 04 Jan 2019 05:42 PM
Last Updated : 04 Jan 2019 05:42 PM

தகுதியிழப்பு எம்எல்ஏக்களால் காலியான 18 தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

18 எம்எல்ஏக்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் காலியாக இருக்கும் 18 தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருமங்கலத்தைச் சேர்ந்த வேதா என்ற தாமோதரன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்த மனுவில், ''தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அதிமுக எம்எல்ஏக்களில் 18 பேர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்தனர். 18 எம்எல்ஏக்களும் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரி ஆளுநரிடம் மனு அளித்தனர்.

இதனால் 18 எம்எல்ஏக்களையும் சபாநாயகர் தகுதியிழப்பு செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிராக 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதில்லை என 18 எம்எல்ஏக்களும் அறிவித்துள்ளனர்.

இந்த சூழலில் அந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தி புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 18 தொகுதிகளை சேர்ந்த 27 லட்சம் வாக்காளர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் காலியான திருவாரூர் தொகுதிக்கு மட்டும் ஜன. 28-ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் 31-ல் அறிவிப்பு வெளியிட்டது. 18 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

இதனால் அந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எம்எல்ஏக்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x