Published : 23 Sep 2014 01:29 PM
Last Updated : 23 Sep 2014 01:29 PM

தூத்துக்குடி: ஊர்க்காவல் படைக்கு செப்.25-ல் வீரர்கள் தேர்வு

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு புதிதாக 52 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான தேர்வு வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மா.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு பணிகளில் ஊர்காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, ஊர்காவல் படைக்கு 44 ஆண்கள், 8 பெண்கள் உள்ளிட்ட 52 பேர் புதிதாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில், தூத்துக்குடிக்கு 11 ஆண்கள், 8 பெண்கள் என 19 பேரும், கோவில்பட்டிக்கு 33 ஆண்களும் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான தேர்வு வரும் 25ம் தேதி காலை 9 மணிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது.

ஆர்வமுள்ள பொதுமக்கள், அரசு பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், சுயதொழில் புரிவோர் அன்றைய தினம் நேரில் ஆஜராக வேண்டும். பணியில் சேர 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்க வேண்டும்.

தேர்வில் கலந்து கொள்ள வருவோர் தங்களது அண்மையில் எடுக்கப்பட்ட 2 மார்பளவு புகைப்படம், உண்மையான கல்விச்சான்றுகள் மற்றும் 2 தபால் அட்டைகள் ஆகியவற்றுடன் நேரில் வரவேண்டும்.

தேர்வு செய்யப்படுவோருக்கு 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் பணியில் சேர அனுமதிக்கப்படுவர். பணிபுரியும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.150 மதிப்பூதியமாக வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x