Published : 01 Jan 2019 03:35 PM
Last Updated : 01 Jan 2019 03:35 PM

புத்தாண்டு கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய மகன்: கண்டித்த தந்தையைத் தள்ளிவிட்டதால் காயம்பட்டு பலி

புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய மகனை மது போதையிலிருந்த தந்தை கண்டித்ததால் ஆத்திரத்தில் தள்ளிவிட அவர் தலையில் காயம்பட்டு மரணமடைந்தார்.

முகப்பேர் மேற்குப் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேஷ் (50). பெயிண்டராக வேலை செய்து வரும் இவருக்கு கண்ணகி என்கிற மனைவியும் 3-ம் ஆண்டு பாலிடெக்னிக் பயிலும் நவீன்குமார் (18) என்கிற மகனும், பிளஸ் 1 பயிலும் மகனும் உள்ளனர். நேற்று நவீன் தனது நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடிவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார்.

வீட்டில் வெங்கடேஷ் மது அருந்திவிட்டு உறங்கியுள்ளார். வீட்டுக்கு வந்த மகனை தாய் கண்ணகி கண்டித்து சத்தம் போட்டுள்ளார். அப்போது தாயாருடன் நவீன் வாக்குவாதம் செய்ய சத்தம் கேட்டு எழுந்த வெங்கடேஷ் மகனைத் திட்டியுள்ளார்.

இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தந்தை வெங்கடேஷை நவீன் தள்ளிவிட அவர் கிரில் கேட் மீது விழுந்ததில் அவரது முன்பக்க தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் வெங்கடேஷ் மயங்கியுள்ளார். உடனடியாக மகன் நவீனும் தாயார் கண்ணகியும் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வெங்கடேஷைப் பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அதிர்ச்சியில் ஆழ்ந்த குடும்பம் அழுதபடியே வெங்கடேஷின்  உடலை வீட்டுக்குக் கொண்டு வந்தனர். வெங்கடேஷ் உடலை அவரது சொந்த ஊரான ஆரணிக்கு கொண்டு சென்று இறுதிச்சடங்கு செய்வதற்காக ஆம்புலன்ஸை அழைத்த போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இறப்பு சான்றிதழ் கேட்டுள்ளார்.

இதையடுத்து தனியார் மருத்துவமனைக்குச் சென்று இறப்புச் சான்றிதழ் கேட்டுள்ளனர். தாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை என்றும், வரும் வழியில் வெங்கடேஷ் இறந்துவிட்டதால் இறப்புச் சான்றிதழ் கொடுக்க முடியாது என்றும் தனியார் மருத்துவமனையில் கூறியுள்ளனர்.

இதையடுத்து நொளம்பூர் காவல் நிலையம் சென்ற கண்ணகி ஊருக்கு சடலத்தை எடுத்துச் செல்வதற்கு இறப்புச் சான்றிதழ் வேண்டும் என்று கூறியுள்ளார்.

இறப்புக்கான காரணத்தை  போலீஸார் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை அப்படியே தெரிவித்துள்ளார் கண்ணகி. போலீஸார் நவீனை  காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கடேஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x