Published : 23 Jan 2019 05:42 PM
Last Updated : 23 Jan 2019 05:42 PM

மேகேதாட்டு அணை விவகாரம்: மத்திய அரசின் சொக்கட்டான்காயாக தமிழக அரசு இருக்கக்கூடாது; வேல்முருகன்

மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசின் சொக்கட்டான்காயாக தமிழக அரசு இருக்கக்கூடாது என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டில் அணை கட்டிக்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் தந்த வழக்கு செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசின் வழக்கறிஞர், கர்நாடக அரசு மேகேதாட்டு அணை வரைவு செயல்திட்டத்தை அனைத்து விவரங்களுடன் மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது; அது தொடர்பான பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்திருக்கிறது. எனவே இது தொடர்பான தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம் தேவை என்றார் தமிழக அரசின் வழக்கறிஞர்.

இதே போல மத்திய அரசின் வழக்கறிஞரும் அவகாசம் கேட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இருவருக்கும் 4 வார கால அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

இதற்குப் பின் பிற்பகலில், கர்நாடக அரசின் பதில் மனு மீது தமிழக அரசு எதிர் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெறாமல் மேகேதாட்டில் அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசுக்கு வரைவு செயல்திட்டத்தை கர்நாடக அரசு தாக்கல் செய்திருப்பது காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது, அவமதிக்கும் செயலுமாகும். எனவே கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியது.

இதேபோன்ற எதிர் பதில் மனுவை மத்திய அரசின் பதில் மனு மீதும் தாக்கல் செய்தது தமிழக அரசு. கடந்த 18 ஆம் தேதி மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. அதில், 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டத்தை நிறைவேற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதியும், இதுவரை எந்த பதிலும் வரவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு, தமிழக மக்களுக்குச் சொல்ல வேண்டிய பதில் என்ன?

அதே சமயம், தமிழக அரசைக் கேளாமலேயே மேகேதாட்டு அணைக்கு ஒப்புதலளித்து, அதன்படி திட்ட அறிக்கையையும் பெற்றுக்கொண்டுள்ளது மத்திய பாஜக அரசு. இது அரசமைப்புச் சட்டம், பொது அறம் எதையுமே கருத்தில் கொள்ளாமல், வஞ்சகம் மற்றும் சூழ்ச்சியுடன் மேற்கொண்ட படுகேவலமான இழிந்த செயல் அல்லவா? இது குறித்து தமிழக அரசு வாய் திறந்ததுண்டா? இதில் தமிழக அரசின் நிலைதான் என்ன?

எனவே மேகேதாட்டு அணை விவகாரத்தில் மூலவேரான மத்திய அரசின் சொக்காயைப் பிடிப்பதற்குப் பதில், அது உருட்டி ஆடும் சொக்கட்டான்காயாக இருக்கக்கூடாது" என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x