Published : 17 Dec 2018 09:11 PM
Last Updated : 17 Dec 2018 09:11 PM

32 ஆயிரம் ஏக்கரில் நீரின்றி கருகும் நெற்பயிர்கள்: திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கவலை

கஜா புயல் தாக்கியதால் மின்சார கட்டமைப்புகள் சிதிலமடைந்தநிலையில், ஆழ்குழாய் கிணறுகளுக்கு கடந்த ஒருமாதகாலமாக மின்சார விநியோகம் நடைபெறவில்லை. இதனால் ஆழ்குழாய் கிணற்று நீரை நம்பியுள்ள சுமார் 32 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன.

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய  மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஒன்றியப் பகுதிகளில்  சுமார் 55 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்து மின்விநியோக கட்டமைப்பு முற்றிலும் சிதிலமடைந்துவிட்டது.

இதனை சரி செய்வதற்காக திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றும் மின்ஊழியர்களுடன் இணைந்து வெளிமாவட்டங்களிலிருந்து  சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முதல்கட்டமாக வீடுகளுக்கும், வர்த்தகப் பகுதிகளுக்குமான மின்சார விநியோகத்தை சீரமைத்து வருகின்றனர்.  இந்தப் பணிகள் நிறைவடைய இன்னும்  15 நாட்களுக்கும் மேல் ஆகும் சூழல் உள்ளது.

அதனால் அதிகளவு ஆழ்குழாய் பாசனங்கள் நடைபெறும் மன்னார்குடி, நீடாமங்கலம்,  மற்றும் கோட்டூர் ஒன்றியப் பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ஆழ்குழாய் கிணறுகளை இயக்க மின்சாரம் வழங்கப்படாததால் சுமார் 32 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யபட்டுள்ள சம்பா, தாளடி நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாதநிலை உள்ளது.

நெற்பயிர்கள் கருகத் தொடங்கிவிட்டன

155 நாட்கள், 135 நாட்கள் வயதுடைய  நெற்பயிர்கள் தற்போது கதிர்கள் வெளிவந்த நிலையிலும், பால்பிடிக்கும் தருணத்திலும் உள்ளதால்  பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகள் போராடி வருகின்றனர்.

 ஜெனரேட்டர்களை பயன்படுத்தி ஆழ்குழாய் கிணறுகளுக்கு மின்சாரம் கொடுத்து பெரும் பெரும் பொருட்செலவு செய்து வருகின்றனர்.

மேலும் கஜா புயலின்போதும், அதனைத் தொடர்ந்தும் மழை பெய்யவில்லை. ஓரிருநாட்களில் பெய்த குறைந்தளவு மழைநீர்தான் தற்போது பயிர்களை காப்பாற்றி வருகின்றது. ஆற்றிலும் தண்ணீர் வரத்து மழை வரும் என நம்பி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ஆற்றுப்பாசன விவசாயிகளும் வயல்களுக்கு தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x