Published : 05 Dec 2018 03:03 PM
Last Updated : 05 Dec 2018 03:03 PM

காந்தி காட்டிய வழியில் மத்திய அரசுக்கு வரிகொடா இயக்கம் நடத்தவும் திமுக தயார்: ஸ்டாலின்

காந்தி காட்டிய வழியில் மத்திய அரசுக்கு வரிகொடா இயக்கம் நடத்தவும் திமுக தயாராக இருப்பதாக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "காவிரி என்பது வெறும் ஆறு அல்ல. அது நம் தமிழ்நாட்டுக்குத் தாய். அதில் ஓடுவது வெறும் நீரல்ல. விளைநிலங்களுக்குத் தாய்ப்பால். டெல்டா மாவட்டங்கள் எனும் குழந்தையை அந்தத் தாய்ப்பால் ஊட்டித்தான் வளர்க்கிறாள் காவிரித் தாய். அந்தத் தாயைக் காக்க வேண்டிய தனயர்கள்தான் தமிழர்கள். அதனால்தான், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதைக் கண்டித்து திமுகவும் தோழமைக் கட்சிகளும் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்தன.

மத்திய அரசைக் கண்டித்தும் - அது வழங்கிய அனுமதியை ரத்து செய்யும் வகையில் மாநில அரசு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினோம். அதுமட்டுமின்றி, அனைத்துக் கட்சிகளின் சார்பில் அகண்ட காவிரி பாயும் மலைக்கோட்டை மாநகராம் தீரர் கோட்டம் திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் திருச்சி உழவர் சந்தை திடல் நிரம்பி வழிந்து திணறும் வகையில் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு அதிர வேண்டும் எனக் குறுகிய இடைவெளியில் இரவு - பகல் பாராமல் அயராது பாடுபட்டார் திருச்சி மாவட்டக் கழகச் செயலாளர் கே.என்.நேரு.

மத்திய அரசைக் கண்டித்து எழுச்சிமிகு முழக்கங்கள். உணர்வலைகளாக அசைந்த அனைத்துக் கட்சிகளின் கொடிகள். திரும்பிய பக்கமெல்லாம் தலைகள் என டெல்லிப் பட்டணத்தைத் திரும்பிப் பார்க்கச் செய்யும் வகையில், திருச்சி போர்க்கோலம் பூண்டது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் தேசிய லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் அப்துல் சமது ஆகியோர் எழுச்சிமிகு கண்டன உரை ஆற்றினர்.

குரல்கள் பலவாக இருந்தாலும் உணர்வு ஒன்று தான். காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் தமிழகத்திற்குள் பிரதமர் மோடி வர முடியாது என்ற குரலே பலமாக ஒலித்தது.

உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு செல்லும் என்பதையும், காவிரி ஆறு கர்நாடகத்திற்கு மட்டும் சொந்தம் கிடையாது என்பதையும் அழுத்தமாகக் குறிப்பிட்டிருக்கும் நிலையில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதியின்றி, மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழ்நாட்டுக்கு மோடி அரசு செய்திருக்கும் பச்சைத் துரோகம்.

அதனால் தான், வஞ்சகத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் மத்திய அரசுக்கு தமிழகம் ஏன் வரி கட்ட வேண்டும் எனக் கண்டன உரையில் கேள்வி எழுப்பினேன். வஞ்சகம் தொடர்ந்தால் பிரிட்டிஷாரை எதிர்க்க காந்தி காட்டிய வழியில் வரிகொடா இயக்கம் நடத்தவும் தோழமைக் கட்சிகளின் துணையுடனும் மக்களின் பங்கேற்புடனும் கழகம் தயாராக இருக்கிறது.

திருச்சியின் எழுச்சி, டெல்லியை அதிரவைத்த நிலையில், சென்னையிலும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவுதான், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அனுமதியை ரத்து செய்யக்கோரும் அவசர சட்டப்பேரவைக் கூட்டம். இதனைத்தான் தொடக்கத்திலேயே கழகமும், தோழமைக் கட்சிகளும் வலியுறுத்தின.

மக்களாட்சி மாண்புகளைப் புறக்கணிக்கும் மாநில ஆட்சியாளர்கள், திருச்சியில் மக்கள் கடலெனத் திரண்ட ஆர்ப்பாட்டத்தின் விளைவாக, சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்துகிறார்கள். உரிமைக்கான போராட்டத்தில் இது தொடக்க கட்ட வெற்றி. தொடர் வெற்றிகள் நிச்சயம்.

மத்திய-மாநில ஆட்சியாளர்களை அலற வைத்த திருச்சி ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு, தஞ்சை மாவட்டம் வழியே, 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டப் பகுதிகளைப் பார்வையிடச் சென்றேன். புயல் கடந்த பூமிக்கு நான் மேற்கொண்ட மூன்றாவது பயணம் இது. முதல் முறை பயணத்தில் ஏற்பட்ட வேதனை, வலி, துன்பம் அனைத்தும் மூன்றாவது பயணத்திலும் தொடர்ந்தது. இன்னமும் பல பகுதி மக்களால் இயல்பு நிலைக்கு மீள முடியவில்லை.  வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தின் கொரடாச்சேரி, இளங்கரக்குடி, முசிறியம், விடயாபுரம், காவாளக்குடி, கண்கொடுத்தவணிதம், எருக்காட்டூர், கமலாபுரம், வெள்ளாக்குடி, தேவர்கண்டநல்லூர் ஆகிய பகுதி மக்களை சந்தித்து கழகத்தின் சார்பில் 6 ஆயிரம் பேருக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணம் வழங்கப்பட்டது.

கண்ணீர் துடைக்கும் நோக்குடன் உங்களில் ஒருவனான நான் எனது கைகளால் சிலருக்கு நேரடியாகவே உதவிகளை வழங்கினேன். தொடர்ந்து பயணம் மேற்கொண்டு பல இடங்களையும் பார்வையிட வேண்டிய சூழலால், மற்றவர்களுக்கு கழக நிர்வாகிகள் உதவிகளை வழங்கினர். அத்தனையும் உங்களைப் போன்ற உடன்பிறப்புகள் பெருந்துயர் துடைக்கப் பேரன்புடன் வாரி வழங்கிய பொருட்கள்.

பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைப்பதுபோல எதிர்க்கட்சியான நாம் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறோம். மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் அரசுகள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து செயல்படாமல் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறார்கள்.

ஒவ்வொரு விவசாயியும் தென்னை மர சேதங்களுக்காக ஹெக்டேருக்கு 2.64 லட்சம் ரூபாய் நிவாரணம் பெறுவர் என நவம்பர் 19 ஆம் தேதி அறிவித்த முதல்வர் பழனிசாமி, தற்போது ஒரு ஹெக்டேருக்கு 175 மரங்கள் என்ற அளவில் 2 ஹெக்டேருக்கு மட்டும்தான் இந்த நிவாரணம் என்று பல்டி அடித்திருக்கிறார். நிதி நிர்வாகம் அதலபாதாளத்தில் விழுந்து கிடப்பதால், புயலில் விழுந்த மரங்களுக்குரிய இழப்பீடை வழங்க முடியாத கையாலாகாத நிலையில் இருக்கிறது மாநில அரசு.

இயற்கைப் பேரிடரிலிருந்து மக்களை மீட்க தேசியர் பேரிடர் மீட்பு நிதியிலிருந்து நிவாரணம் வழங்க வேண்டியது மத்திய அரசு. இதற்கான சட்டங்கள் உள்ளன. அதனை மதிக்காமல், தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது மோடியின் ஆட்சி. தமிழ்நாடு முதல்வர் வேறுவேறு காரணங்களுக்காக டெல்லிக்கு சென்று, புயல் நிவாரணக் கோரிக்கை என்ற பெயரில் அவசரக் கோலத்தில் அளித்த அறிக்கைப்படி கேட்டுள்ள தொகை 14, 910 கோடி ரூபாய். உடனடி நிவாரணத் தொகையாகக் கேட்டது 1,413 கோடி ரூபாய். ஏறத்தாழ 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்ட நிலையில், கிடைத்திருப்பதோ சில நூறு கோடிகள் மட்டுமே.

அதுவும்கூட, வழக்கமாக தேசியப் பேரிடருக்குத் தரப்பட வேண்டிய நிதிதானே தவிர, கஜா புயல் குறித்து மத்திய அரசு தனிக் கவனம் செலுத்தவேயில்லை. அதுபற்றி வாய் திறக்க மாநிலத்தை ஆள்பவர்களுக்கும் வக்கில்லை.

பரிதவிக்கும் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், பழிவாங்கும் போக்குதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. திருச்சி மாவட்ட நுண்ணறிவு காவல் பிரிவில் பணியாற்றிவந்த பெண் காவலர் செல்வராணி. இலக்கிய ஆர்வம் கொண்டு அதனை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் கருணாநிதியின் இலக்கியங்கள் மீதும் பற்று கொண்டிருந்தார். தலைவரின் மரணத்திற்காக இரங்கற்பா எழுதி, வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டார். 

அதனால் மேலிட உத்தரவுப்படி, திருச்சி மாவட்டக் காவல்துறை காவலர் செல்வராணியை மத்திய மண்டலக் காவல்துறைக்கு மாற்றியது. மறைந்த தலைவருக்கு இரங்கற்பா எழுதிய ஒரே காரணத்திற்காக, அவருக்கு மெமோ கொடுத்து விசாரணை என்ற பெயரில் இழிவுபடுத்தி, பெண் என்றும் பாராமல் உணர்வுகளைக் காயமாக்கி, தண்டனை நடவடிக்கையாக பணியிட மாறுதல் செய்ததை ஏற்றுக்கொள்ள இயலாத காவலர் செல்வராணி தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்தியாவிலேயே முதன்முதலாக காவல்துறையில் பெண்களை இடம்பெறச் செய்த சாதனைக்குரியவர் கருணாநிதி. அவருக்கு நன்றி செலுத்தி இரங்கற்பா எழுதுவதுகூட இந்த ஊழல் ஆட்சியாளர்களுக்குக் குற்றமாகத் தெரிகிறது. திருச்சி போராட்டத்திற்குப் பிறகு பெண் காவலர் செல்வராணியையும் நேரில் சந்தித்தேன். கருணாநிதியைத் தன் தந்தையைப் போலக் கருதியதாகச் சொன்ன அவர், என்னை தன் அண்ணனாக நினைத்து அன்பு செலுத்தினார். நாம் அத்தனைபேருமே கருணாநிதியின் உடன்பிறப்புகள்தானே. அந்தத் தங்கைக்குத் தைரியம் ஊட்டிவிட்டுத் திரும்பினேன்.

அகம்பாவம் கொண்ட மத்திய அரசு - அலட்சியம் மிக்க மாநில அரசு இரண்டும் நீடிக்கும் வரை தமிழ்நாட்டின் நிலை இப்படித்தான் இருக்கும். இந்தியாவின் வளர்ச்சிக்கும் நெருக்கடிதான். திருச்சி போராட்டத்தில் தோழமைக் கட்சித் தலைவர்கள் அனைவரும் சூளுரைத்தது போல மத்திய - மாநில அரசுகள் தொலைந்திடும் இன்பநாள் வெகுதொலைவில் இல்லை.

திருச்சியில் தொடங்கியது திக்கெட்டும் பரவும். போராட்டக்களம் பூகம்பமாகும். அது தேர்தல் களத்தில் எதிரொலிக்கும். மத நல்லிணக்க ஆட்சி மத்தியிலும், மக்கள் நலன் காக்கும் ஆட்சி மாநிலத்திலும் விரைவில் மலரும்" என ஸ்டாலின் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x