Published : 22 Apr 2014 08:24 AM
Last Updated : 22 Apr 2014 08:24 AM

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வணிக மின் உற்பத்தி தொடங்க கெடு: மின்சார ஆணையம் எச்சரிக்கை

கூடங்குளம் மின் நிலையத்தில் 6 மாதங்களாக சோதனை ஓட்டத் திலேயே மின் உற்பத்தி செய்யப் பட்டு வருகிறது. ஏப்ரல் இறுதிக் குள், வணிக மின் உற்பத்தி தொடங்க வேண்டும் என்று மின்சார ஆணையம் கெடு விதித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் மத்திய அரசின் நிறுவனமான தேசிய அணுசக்திக் கழகம் சார்பில், 2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யும் இரண்டு அலகுகள் கொண்ட அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் ரூ.17,270 கோடி மதிப்பில் கடந்த 10 ஆண்டுகளாக பணி கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது இந்த மின் நிலையம் உற்பத்தியையும் தொடங் கியுள்ளது.

கூடங்குளத்தில் தேவையான அளவுக்கு மின் உற்பத்தி செய்ய முடியாது என்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனாலும், மத்திய, மாநில அரசுகளின் தீவிர முயற்சியால் கூடங்குளம் நிலையத்தில், கடந்த அக்டோபர் முதல் சோதனை முறையில் மின் உற்பத்தி தொடங்கியது.

முதல் அலகில், சுமார் 150 மெகாவாட் என்ற அளவில் தொடங்கி, படிப்படியாக 650 மெகாவாட் வரை மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

சோதனை ஓட்டத்துக்குப்பின், ஒரு மாதத்துக்குள் வணிக மின் உற்பத்தி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 6 மாதங்களாகியும் இதுவரை கூடங்குளத்தில் வணிக ரீதியான மின் உற்பத்தி தொடங்கவில்லை. மின் நிலையத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, மீண்டும் சரி செய்யப்பட்டு, உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கிடையில், கூடங்குளம் மின் நிலைய அதிகாரிகளுக்கு மத்திய மின்சார ஆணைய அதிகாரிகள் திடீர் காலக்கெடு விதித்துள்ளனர். எந்தவொரு மின் நிலையமும் சோதனை முறையில் மின் உற்பத்தி தொடங்கியபின், 6 மாதங்களுக்குள் வணிக மின் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். அதற்கு மேல் காலதாமதமானால், கூடங்குளம் நிலைய மின்சாரத்தை மின் தொகுப்புக்குள் சேர்ப்பதில் சிக்கல் ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து, சில வாரங்களுக்கு முன்பு நடந்த சிறப்புக் கூட்டத்தில் தேசிய அணுமின் கழக அதிகாரிகளுடன் மின்சார ஆணைய அதிகாரிகள் விரிவான ஆலோசனை நடத்தினர். தாமதத்துக்கான காரணம் குறித்து, அறிக்கை கேட்டுள்ளனர். இதையடுத்து, அணு மின் கழக அதிகாரிகள் தாக்கல் செய்த அறிக்கையில், மின் நிலைய கருவிகளை முழு செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் சில சிக்கல்கள் உள்ளதாகவும், ரஷ்ய விஞ்ஞானிகளின் அறிவுரைப்படி, தொழில்நுட்பப் பணிகள் நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இம்மாதத் துக்குள் வணிக மின் உற்பத் தியை கூடங்குளம் மின் நிலை யத்தில் தொடங்க வேண்டும். இல்லையென்றால் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணை யத்திடம் மறு அனுமதி பெற்று வரவேண்டும் என்று மின் ஆணைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், அணு மின் சக்தி அதிகாரிகள், கூடங்குளம் நிலையத்தில் வணிக மின் உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x