Published : 28 Dec 2018 10:36 AM
Last Updated : 28 Dec 2018 10:36 AM

தினமும் நம்பிக்கை அவநம்பிக்கைக்கிடையே சிக்கி சாகிறேன்: அற்புதம் அம்மாள் வேதனை

தான் தினமும் நம்பிக்கை அவநம்பிக்கைக்கிடையே சிக்கிச் சாவதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பெரும் 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவருக்குமே விசாரணை நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் பல்வேறு காலகட்டங்களில் ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்தது.

அதுமட்டுமின்றி, அவர்கள் அனைவரும் ஆயுள் தண்டனைக் காலமான 14 ஆண்டுகளை ஏற்கெனவே சிறைகளில் கழித்துவிட்டதால் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகளின்படி அவர்களை விடுதலை செய்யலாம் என்று கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதனடிப்படையில் அவர்களை விடுவிப்பதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அவர்களை விடுதலை செய்ய இயலவில்லை.

7 தமிழர்களின் விடுதலை கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக தாமதமாகி வந்த நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி அவர்களை விடுவிப்பது குறித்து மாநில ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் செப்டம்பர் 9 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூடி 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

7 தமிழர்களின் நடத்தை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கோப்புகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், இன்று வரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இதுகுறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதற்கு, திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றி 100 நாட்களைக் கடந்த நிலையில், தான் தினமும் நம்பிக்கை அவநம்பிக்கைக்கிடையே சிக்கிச் சாவதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "விடுதலைக் கோப்பு கையெழுத்தாகல. தினம் நம்பிக்கை அவநம்பிக்கைக்கிடையே சிக்கிச் சாகறேன். தாமதம் ஏன்னு கேட்டு அறிவு ஒரு ஆர்டிஐ அனுப்பினான். 48 மணி நேரத்துல பதில் கேட்டு 48 நாளும் ஆயிருச்சு. பதில காணோம். அரசியல் சட்டத்துக்குதான் மதிப்பில்ல. ஆர்டிஐ-க்குமா செல்லாம போயிரும்?" என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x