Published : 05 Dec 2018 10:53 AM
Last Updated : 05 Dec 2018 10:53 AM

ஆட்சியை தக்கவைக்க மத்திய அரசிடம் மண்டியிட்டுக் கிடப்பதற்கு அதிமுக தயாராகிக் கொண்டிருக்கிறது: ஸ்டாலின் பேட்டி

ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள மத்திய அரசிடம் மண்டியிட்டுக் கிடப்பதற்கு அதிமுக தொடர்ந்து தயாராகிக் கொண்டிருக்கிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

மேகதாது விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக நாளை சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூடுகிறதே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

இது அவசியமான கூட்டம். ஏற்கெனவே திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அந்த தீர்மானத்தை நிறைவேற்றியது மட்டுமல்லாமல், செவ்வாய்க்கிழமை திருச்சியில் கண்டனக் கூட்டத்தை நடத்தி இருக்கிறோம். ஆகவே, எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு நாளை மாலை சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூட்டப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால், அந்த சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரசின் சார்பில் வைக்கப்படக்கூடிய தீர்மானத்தைப் பொறுத்து நாங்கள் எங்களுடைய கருத்துகளை எடுத்துச் சொல்லுவோம. அந்த அடிப்படையில் எங்களுடைய அணுகுமுறை நிச்சயமாக இருக்கும்.

'கஜா' புயலுக்கான நிவாரண நிதி இப்போது மறக்கப்பட்டுவிட்டதாக சில கருத்துகள் வருகிறதே. அதுபற்றி உங்கள் கருத்து?

நான் நேற்று திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளுக்கெல்லாம் நேரடியாகச் சென்று பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினேன். அங்கு மக்கள் வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு மிக சோகமான ஒரு சூழ்நிலையிலே இருந்து வருகிறார்கள். அதாவது நாட்டுக்கே படி அளந்து கொண்டிருந்த டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் சோற்றுக்கு கையேந்தும் ஒரு கொடுமையிலும் இருந்து கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசின் சார்பில் கேட்கப்பட்டு இருக்கக்கூடிய நிதியை இன்னும் அதிகப்படுத்தி மத்திய அரசு வழங்க வேண்டும்.

தமிழக அரசு 'கஜா' புயல் பாதிக்கப்பட்டு 20 நாட்கள் ஆகியும் எந்த நிவாரணமும் செய்யவில்லை என சொல்லப்படுகிறதே?

அவர்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதாக இல்லை. ஆட்சியை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மோடி தலைமையில் இருக்கக்கூடிய மத்திய அரசிடம் மண்டியிட்டுக் கிடப்பதற்கு அவர்கள் தொடர்ந்து தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் 20 தொகுதியும் காலியாகத்தான் இருக்கிறது, எப்பொழுது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் வரலாம் என்று  தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதி இருக்கிறார். அந்தச் சூழ்நிலையில் திமுக எவ்வாறு எதிர்கொள்ளும்?

எந்தச் சூழ்நிலையில் எப்போது தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள திமுக தயாராக இருக்கிறது. 

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x