Published : 31 Dec 2018 07:55 AM
Last Updated : 31 Dec 2018 07:55 AM

புத்தகங்களோடு சொல்லுங்கள் புத்தாண்டு வாழ்த்து; டிச.31, ஜன.1 இரு நாட்களும் 50% வரை தள்ளுபடி: இன்று நள்ளிரவிலும் கடைகள் திறந்திருக்கும்

புத்தாண்டு நாளைப் புத்தகங்களுடன் கொண்டாடும் கலாச்சாரத்தை உருவாக்கும் வகையில், உருவான ‘புத்தகங்களுடன் புத்தாண்டு இயக்கம்’ இந்த ஆண்டு பெரிய அளவில் விரிந்திருக்கிறது. முக்கிய நகரங்களில் மட்டுமே இதுவரை நடந்துவந்த சூழல் மாறி, சென்னை தொடங்கி குமரி வரை நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் இந்த ஆண்டு புத்தக இரவுக் கொண்டாட்டம் நடக்கிறது. புத்தக விலையில் 10% முதல் 50% வரை பதிப்பகங்கள் தள்ளுபடியை அறிவித்திருக்கின்றன.

புத்தாண்டு அன்று வாசகர்கள் வெளியில் சந்திக்கும் முதல் நபருக்கும், ஏனைய நண்பர்களுக்கும் புத்தகங்களைப் பரிசளித்துப் புத்தாண்டு வாழ்த்து சொல்ல வேண்டும். இப்படி ஒரு இயக்கத்தை ‘இந்து தமிழ்’ முன்மொழிந்ததும் ‘தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்’ (பபாசி) ஆர்வத்தோடு தன்னையும் இதில் இணைத்துக்கொண்டது. நான்காவது ஆண்டாக இந்த ஆண்டும் ‘புத்தகங்களோடு புத்தாண்டு இயக்கம்’ விரிவான ஏற்பாடுகளோடு களைகட்டியிருக்கிறது.

தென்னிந்தியப் பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் (பபாசி) வழக்கம்போல மாநிலம் முழுவதும் உள்ள புத்தக விற்பனையாளர்களிடம், “குறைந்தபட்சம் 10% தள்ளுபடி வழங்குங்கள்; டிச.31 காலை தொடங்கி ஜன.1 இரவு வரை கடைகளைத் திறந்துவைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திடுங்கள்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. இது நீங்கலாக, பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்களும் தத்தமது அளவில் தனித்தனி திட்டங்களுடன் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களில்…

தமிழ்நாடு முழுவதும் குறைந்தபட்சமாக நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் டிசம்பர் 31 நள்ளிரவில் புத்தகக் கடைகளைத் திறந்துவைப்பதற்கான, வாசகர்களும் எழுத்தாளர்களும் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது முன்னணிப் பதிப்பகங்களில் ஒன்றான பாரதி புத்தகாலயம். 10% - 50% தள்ளுபடியையும் அறிவித்திருக்கிறது. மேலும், “புத்தக இரவுக் கொண்டாட்டத்தில் குழந்தைகளைக் கதைசொல்ல வைக்கவும் புத்தக விமர்சனம் செய்யச் சொல்லவும் இம்முறை திட்டமிட்டிருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்கள். இதேபோல, என்சிபிஹெச் நிறுவனமும் அதன் விற்பனையகங்கள் உள்ள ஊர்களில் எல்லாம் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது. என்சிபிஹெச் பதிப்பக வெளியீடுகளுக்கு 30% தள்ளுபடியை அது அறிவித்திருக்கிறது.

சென்னையில்…

கவிஞர் மனுஷ்ய புத்திரனின் ‘உயிர்மை’ பதிப்பகம் தனது சென்னை அலுவலகத்தில் எழுத்தாளர்களோடு கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறது. எழுத்தாளர்

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘தேசாந்திரி பதிப்பக’மும் 10% தள்ளுபடியை அறிவித்திருக்கிறது. வாசகர்களுடன் ராமகிருஷ்ணன் உரையாடுகிறார். சென்னையின் முக்கியமான புத்தகக் கடைகளில் ஒன்றான ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ 10% தள்ளுபடி விற்பனையுடன், புத்தக இரவுக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வாசகர்களுக்குப் பரிசும் அறிவித்திருக்கிறது. அங்கு டிசம்பர் 31 மாலை 3.30 மணிக்குத் தொடங்கும் கொண்டாட்டம் விடிய விடிய நீடிக்கிறது.

சென்னைக்கு வெளியே…

சென்னைக்கு வெளியே உள்ள பதிப்பகங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றும், நாகர்கோவிலை மையமாகக் கொண்டு இயங்குவதுமான ‘காலச்சுவடு பதிப்பகம்’ அதன் நாகர்கோவில், சென்னை அலுவலகங்களில் 25% தள்ளுபடி விற்பனையை அறிவித்திருக்கிறது. கோவையை மையமாகக் கொண்டு இயங்கும் ‘விஜயா பதிப்பகம்’ 10% தள்ளுபடியையும், சிறப்பு நிகழ்ச்சிகளையும் அறிவித்திருக்கிறது. மதுரையை மையமாகக் கொண்டு இயங்கும் ‘நற்றிணை பதிப்பகம்’, மூன்றில் ஒரு பங்கு விலையில் புத்தகங்களை விற்பதாகச் சொல்லியிருக்கிறது. பொள்ளாச்சியை மையமாகக் கொண்டு இயங்கும் ‘எதிர் பதிப்பகம்’ அங்கு தன்னுடைய புத்தகங்களுக்கு 30% தள்ளுபடி விற்பனையையும் புத்தக இரவுக் கொண்டாட்டத்தையும் அறிவித்திருக்கிறது.

இந்து தமிழ் திசை…

நம்முடைய ‘தமிழ் - திசை’ பதிப்பகமும் 10% தள்ளுபடி விற்பனையை டிச.31, ஜன.1 இரு நாட்களுக்கும் அறிவித்திருக்கிறது. இது நீங்கலாக, ‘இந்து குழுமம் (ஆங்கிலம்)’ முன்கூட்டி அறிவித்திருந்த 10% முதல் 50% வரையிலான தள்ளுபடி விற்பனை டிச.31 அன்றோடு முடிகிறது – ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் அலுவலகங்களில் இந்நூல்களைப் பெறலாம்.

வந்துவிட்டது 2019. ‘புத்தகம் வாங்குவோம் புத்தாண்டைக் கொண்டாடுவோம்’ என்ற முழக்கத்துடன் இந்தப் புத்தாண்டை மட்டுமல்ல; இனிவரும் எல்லாப் புத்தாண்டுகளையும் கொண்டாடுவோம்! வளமான ஒரு புத்தகக் கலாச்சாரத்துக்கு வித்திடுவோம்!

உங்களுக்குப் பிடித்த புத்தகங்கள் எவை? சமூக வலைதளங்களில் பகிருங்கள்!

2018-ல் நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்தமான புத்தகங்கள் என்னென்ன? அவற்றை எழுதிய ஆசிரியர்கள், விலை, பதிப்பகம், பிடிக்கக் காரணம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஃபேஸ்புக், வாட்ஸப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நண்பர்களுக்குப் பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்களின் பட்டியலையும் கேளுங்கள். குறைந்தது மூன்று புத்தகங்கள். புத்தககங்களைப் பற்றிப் பேசுவதையும் விவாதிப்பதையும் ஒரு விளையாட்டாக முன்னெடுப்போம்; கலாச்சாரமாக மாற்றுவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x