Published : 22 Dec 2018 08:31 AM
Last Updated : 22 Dec 2018 08:31 AM

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு விவ காரத்தில், தற்போதைய நிலையே தொடர உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதனால் தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின்படி  ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

தூத்துக்குடியில் இயங்கிய ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின்போது போலீ ஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மாணவி உட்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இப்போராட்டத்தைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இதில், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அக்குழு ஆய்வு செய்து ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கப் பரிந்துரை செய்தது.

குழு அளித்த அறிக்கையின் அடிப் படையில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கவும், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கவும், போலீஸ் பாது காப்பு வழங்கவும் தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதை ரத்து செய்யக்கோரி  தூத்துக்குடியை சேர்ந்த பேராசிரியை பாத்திமா உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய் தார்.  இந்த மனு விசாரணைக்கு உகந் ததா, இல்லையா என்பது தொடர்பாக நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆதிகேசவலு அமர்வில்  நேற்று பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர்  வைகை வாதிட்டதாவது:

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங் கிய தீர்ப்பு, பசுமைத் தீர்ப்பாயத்தின் இணையத்தில் பிற்பகல் 2 மணிக்குதான் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பே வேதாந்தா நிறுவனத்துக்கு உத்தர வின் நகல் கிடைத்துள்ளது. ஒரு வழக்கில் நீதிமன்றம் / தீர்ப்பாயம் அதிகாரப்பூர்வ தீர்ப்பு வழங்கும் முன்பே தீர்ப்பு வெளியானால் அது  செல்லுபடி ஆகாது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாரர் தரப்பில் தன்னையும் ஒரு எதிர் மனுதாரராகச் சேர்க்க மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது முடி வெடுக்கும் முன்பே தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. காற்று, நீர் சட்டப்படி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது. ஆனால் நீர் சட்டத்தில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்துதான் தேசிய பசுமைத்  தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாநில மக்களும், மாநில அரசும் எதிர்க்கும் திட்டத்துக்கு பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது சட்ட விரோதம். ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேதாந்தா நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

தமிழக அரசுக்கு கேள்வி

இதையடுத்து மனுவை விசா ரணைக்கு ஏற்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மார்ச் 14 வரை அவகாசம் உள்ளது. ஆகவே இவ்விவகாரத்தில்  தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.

பதில் மனுவுக்கு உத்தரவு

இந்த மனு தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம், சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர்

மற்றும் உறுப்பினர் செயலர், மின் வாரிய கண்காணிப்புப் பொறியாளர், வேதாந்தா நிறுவனம் பதில் மனு  தாக்கல் செய்ய வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர், விசாரணையை ஜன. 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x