Published : 27 Dec 2018 01:40 PM
Last Updated : 27 Dec 2018 01:40 PM

திரும்பிப் பார்க்கிறோம் 2018: இளையராஜாவின் பாட்டைக் கேட்டுத் தூங்கிய யானை, ஆதரவற்ற சிறுவனை மகனாக ஏற்ற காவல் உதவி ஆணையர்

நான், எனது, எனக்கு என்று சுருங்கிவிட்ட உலகில், இன்றும் உள்ளம் நெகிழச் செய்யும் நிகழ்வுகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அப்படி நம்மைச் சிலிர்க்க வைத்து, சிலாகிக்கவும் வைத்து, கவனம் ஈர்த்த சில நிகழ்வுகளின் தொகுப்பு உங்களுக்காக....

சோதனைகளை சாதனைகளாக்கிய சிவகுரு ஐஏஎஸ்

சிவகுரு ஐஏஎஸ்- முன்னேறத் துடிக்கும் அனைவருக்குமான முன்னுதாரணம். சாதாரணக் குடும்பத்தில் பிறந்து பொறியியல் படிக்கும் கனவுடன் இருந்தவர், குடும்பத்துக்காக மரம் அறுக்கும் தொழிலாளியாக மாறினார். கொண்ட லட்சியத்தில் உறுதியாக இருந்தவர், சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைக் கொண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தார்.

நண்பர் ஒருவரின் வழிகாட்டுதலால் ஐஐடி பயிற்சி மையத்தில் இணைந்து, ஐஐடியில் முதுகலை பொறியியல் முடித்தார். படிக்கும்போதே தேர்வெழுதி ஐஇஎஸ் ஆனார். ஐஏஎஸ் கனவு அவரை விடாமல் துரத்தியது. பணியில் இருந்தவாறே மீண்டும் கடினமாக உழைத்தார் சிவகுரு. ஐஏஎஸ் அவர் வசமானது.  வெல்ல நினைக்கும் அனைவருக்கும் சிவகுரு பிரபாகரன் கடந்து வந்த பாதை ஓர் உற்சாக டானிக்!

170 மணி நேரம்.. உலகின் நீண்ட யோகா மாரத்தான்: கின்னஸ் சாதனை படைத்த கவிதா

உடற்பயிற்சிகளை தினமும் ஓர் அரை மணி நேரம் செய்வதற்கே நாம் யோசிப்போம். அதைத் தவிர்க்க ஆயிரம் வெற்று சமாதானங்களைச் சொல்லிக்கொள்வோம். ஆனால்  31 வயது சென்னைப் பெண் கவிதா, 170 மணி நேரங்கள் தொடர்ந்து யோகா செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்தார். 

இதுகுறித்துப் பேசிய கவிதா, ''மூன்றரை வயதுக் குழந்தைக்குத் தாயான என்னாலும் கின்னஸ் படைக்க முடியும் என்று என் கணவன் பரணிதரன் நம்பினார். சாதிப்பதற்கு வயது தடையல்ல என்பதைப் புரிந்துகொண்டு விடாமுயற்சியுடன் இயங்கினால் வெற்றி நிச்சயம்'' என்கிறார்.

தாய், பாட்டியின் கனவை நிஜமாக்கிய சென்னை விமானி

தாய், தந்தையை முதன்முதலாக விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவாக இருக்கும். சிலர் அந்தக் கனவை நிறைவேற்றியும் இருக்கலாம். ஆனால் சென்னையைச் சேர்ந்த பிரதீப் கிருஷ்ணன், விமானியாகி அதில் தாயையும் பாட்டியையும் அழைத்துச் சென்றார்.

விமானத்தை ஓட்ட ஆரம்பிக்கும் முன், இருவரின் காலில் விழுந்து அவர் ஆசிர்வாதம் பெறும் நிகழ்வு, காண்போருக்கு நெகிழ்வு.

மனம் நெகிழ வைத்த கேரளா: இந்துவைப் புதைக்க தேவாலயத்தில் இடம்

வரலாறு காணாத கேரள வெள்ளத்தின்போது, நிவாரண முகாமாக மாற்றப்பட்ட தேவாலயத்தில் தங்கியிருந்த இந்து ஒருவர் (சுப்பிரமணியன்) பலியானார். உடலைப் புதைக்க இடமில்லாமல் உறவினர்கள் கதறி அழுதனர். இறந்தவருக்குச் சொந்தமாக அதே நகரில் 4 ஏக்கர் நிலம் இருந்தும், சூழ்ந்த வெள்ளத்தால் அவரின் உடலைப் புதைக்க இடமில்லை.

இதை அறிந்த தேவாலயத்தின் பாதிரியார், துளிகூடத் தயங்காமல், சுப்பிரமணியன் உடலை அங்கேயே அடக்கம் செய்ய அனுமதித்தார். தேவாலய வளாகத்தில் அவருக்கு இந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும்  இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. மதங்களைக் கடந்த மனிதநேயத்தைக் காட்டி, கேரளா மனம் நெகிழ வைத்தது.

ஆதரவற்ற சிறுவனை மகனாக ஏற்ற காவல் உதவி ஆணையர்

'நீ என்னுடைய மகன் போல', 'மகள் போல' என்று போகிற போக்கில் மற்றவர் சொல்லிக் கேட்டிருப்போம். ஆனால் எந்த வகையிலும் தொடர்பில் இல்லாத ஒருவரை மகனாக ஏற்றவர் குறித்துக் கேட்டிருக்கிறோமா?

ஆச்சர்யப்பட வேண்டாம், கேளுங்கள். அயனாவரம் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் பெண் ஒருவரின் கொலை வழக்கை விசாரிக்கப் போனார் அப்பகுதி காவல் உதவி ஆணையரான எம்.பாலமுருகன். தந்தை இறந்து, தாய் கொலை செய்யப்பட, ஆதரவில்லாமல் நின்றான் அவர்களின் 8 வயது மகன். நெஞ்சம் பதைபதைத்த பாலமுருகன், சிறுவனை மகனாக அரவணைத்த சம்பவம் கேட்டோரின் மனதை உருக்கியது.

பழி தீர்த்தார்- 'உலக சாம்பியன்' சிந்து

வெற்றிக்கும் தோல்விக்கும் நூலிழைதான் வித்தியாசம். சிந்துவுக்கும் அதே இழையில்தான் வெள்ளி கிடைத்து வெற்றி பறிபோய்க் கொண்டிருந்தது. முன்னதாக ஒலிம்பிக் போட்டியிலும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய சிந்து வெள்ளிப்பதக்கம் மட்டுமே வென்றிருந்தார் சிந்து. அவருக்கு ஆண்டின் கடைசியில் கிடைத்த முதல் தங்கம் உற்சாகத் தொடக்கமாக அமைந்தது.

உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் சிந்து முதல் முறையாகச் சாம்பியன் பட்டத்தை வென்று 'உலக சாம்பியன்' ஆனார். கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் இதே ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவிடம் அடைந்த தோல்விக்கு இம்முறை பழி தீர்த்தார் சிந்து.

இளையராஜாவின் பாட்டைக் கேட்டுத் தூங்கிய யானை

இசைக்கு மயங்காதவர் யாராவது உண்டா? தூங்காமல் முரண்டு பிடித்த யானைக்கு தாலாட்டுப் பாட்டைப் பாடித் தூங்க வைத்தார் கேரளாவைச் சேர்ந்த பாகன். பிரபல தாலாட்டுப் பாட்டான 'அல்லி இளம் பூவோ' என்ற மலையாளப் பாட்டு அது.

இன்குரலில் பாகன் பாட்டைப் பாடப் பாட கட்டாந்தரையில் கவலைகள் மறந்து உறங்கியது யானை. பாட்டுக்கு இசையமைத்தது நம் இளையராஜா.

வளர்ப்பு நாயால் உயிர் பிழைத்த கேரள குடும்பம்

நாய்களின் நன்றி உணர்ச்சி பற்றி பல நிகழ்வுகள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் இந்தச் சம்பவம் மிகவும் ஸ்பெஷல். வளர்ப்பு நாயால், ஒரு குடும்பமே உயிர் பிழைத்த நிஜம் இது. 

இடுக்கியில் கீரித்தோடு என்னும் பகுதியில் கனமழைக்கு நடுவே இரவில் மோகனன் என்பவரின் குடும்பத்தினர் தங்கள் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது அதிகாலை 3 மணியளவில் அவர்களது வளர்ப்பு நாய் வழக்கத்துக்கு மாறாக கடும் கூச்சலிட்டு குரைத்தது. ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்த அவர்கள், குழந்தைகளுடன் நாயையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர். அவர்கள் வெளியேறிய சற்று நேரத்தில் அவர்கள் வசித்த வீடு, கண் முன்னே நொறுங்கியது.

வீட்டைக் காக்கும் நாய், அன்று விலைமதிப்பற்ற சில உயிர்களையும் காப்பாற்றி, வளர்த்த குடும்பத்துக்கு நன்றி செலுத்தியது.

கர்நாடகாவில் இருந்து 3 நாட்கள் பயணித்து மியான்மர் சென்ற அரிய வகை ரத்தம்

இன்றைய தொழில்நுட்ப உலகில் சாத்தியமில்லை என்று எதுவும் இல்லை. இதுவும் அத்தகைய நிகழ்வுதான். பாம்பே ரத்த வகை (முதன்முதலாக1952-ல் மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது) என்று அழைக்கப்படும் அரிய வகை ரத்தம் மியான்மரில் இதய அறுவை சிகிச்சையை மேற்கொண்ட பெண் ஒருவருக்குத் தேவைப்பட்டது.

உலகத்திலேயே 0.0004% அளவில் இருக்கும் இந்த ரத்த வகை, கர்நாடகத்தில் உள்ள தனியார் ரத்த சேகரிப்பு மையத்தில் இருந்தது. சேகரிக்கப்பட்ட ரத்த வகையை 35 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அப்போது ரத்தத்தை சேமித்து 25 நாட்கள் ஆகியிருந்தன. 10 நாட்களுக்குப் பின்னர் ரத்தம், அதன் தன்மையை இழந்துவிடும் சூழல் இருந்தது. ரத்தத்தை அனுப்பத் தேவையான அனுமதி உடனடியாகப் பெறப்பட்டது. 2- 8 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்ட ரத்தம், கொரியர் மூலம் 3 நாட்கள் பயணித்து மியான்மரை அடைந்தது. விலைமதிப்பில்லாத ஓர் உயிரை மீட்டெடுத்தது.

'கஜா' புயல் நிவாரணத்துக்கு உண்டியல் பணத்தை வழங்கிய 7 வயது சிறுமி

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பர். எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கும்போதே மற்றவர்களுக்கு உதவப் பலமுறை யோசித்திருப்போம். ஆனால் சத்திய மங்கலத்தைச் சேர்ந்த தீக்‌ஷா (7) என்னும் சிறுமி, தனது உண்டியல் சேமிப்பான 950 ரூபாயை 'கஜா' புயல் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

இதயக்கோளாறு மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக தீக்‌ஷாக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. போதிய பணமில்லாமல் மேலும் ஓர் அறுவை சிகிச்சைக்காகக் காத்திருந்த நிலையில், அவர் தனது சேமிப்பை அளித்தது எல்லோரின் மனதையும் உருக்கியது. ஆச்சர்ய அதிர்ச்சியாக தீக்‌ஷாவின் அனைத்து மருத்துவ செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்.

தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x