Published : 29 Nov 2018 09:41 AM
Last Updated : 29 Nov 2018 09:41 AM

கரூர் மாவட்டத்தில் மதிமுக நிர்வாகிகள் 12 பேர் திடீர் நீக்கம் மாவட்டச் செயலாளருக்கு எதிரான போர்க்கொடி காரணமா?

கரூர் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் 12 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்ட மதிமுக துணைச் செயலா ளர் வி.பி.கேசவன், அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் கோ.கலை யரசன், க.பரமத்தி வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் அப்பன் வி.கே.பழனிசாமி, கடவூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முரு கேசன், தோகைமலை ஒன்றியப் பொறுப்பாளர் கல்லடை க.இளங்கோ, கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் பி.கே.சங்கப்பிள்ளை, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் எம்.வி.தமிழ்ச்செல்வன், தாந்தோன்றி கிழக்கு ஒன்றியச் செயலாளர் சா.தென்றல், தாந்தோன்றி மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் ஆர்.ஜெய ராமன், தாந்தோன்றி நகரப் பொறுப்பாளர் என்.ராஜாமணி, குளித்தலை நகர பொறுப்புக்குழுத் தலைவர் எம்.ஆர்.டி.ரவிக்குமார், அருண் தங்கவேல் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வருவதால் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந் தும் நீக்கப்படுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

காரணம் என்ன?

திமுகவில் இருந்து வைகோ நீக்கப்பட்டதை கண்டித்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியம் நொச்சிப்பட்டி தண்டபாணி தீக் குளித்து உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற வைகோ, திமுகவிடம் இதற்காக நீதி கேட்டார். இதையடுத்தே 1994-ம் ஆண்டு மதிமுகவை உருவாக்கினார்.

தமிழக அளவில் கரூர் பகுதியில் வலிமையாக இருந்த மதிமுக, கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு 1996-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கரூர், குளித்தலை நகராட்சித் தலைவர் பதவி களை கைப்பற்றியது. மதிமுக தொடங்கப்பட்ட போது ஒன்றிய மாணவரணி அமைப்பாளராக இருந்த கோ.கலையரசன், படிப் படியாக உயர்ந்து ஒன்றியச் செயலாளர் ஆனவர்.

மதிமுக மாவட்டச் செயலாளராக இருந்த பரணி மணி கட்சியை விட்டு விலகி திமுகவில் இணைந்தபோது, அடுத்த மாவட்டச் செயலாளராக கோ.கலையரசன் நியமிக்கப்படலாம் என கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், கபினி சிதம்பரம் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து கலையரசனை சமாதானப்படுத்த அவருக்கு 'ஆபத்து உதவி மாநில செயலாளர்' என்ற பொறுப்பு வழங்கப்பட்டது.

கட்சியினர் அதிருப்தி

இந்நிலையில், மாவட்ட பொறுப்பாளர் கபினி சிதம்பரம் தன்னிச்சையாக செயல்படுவதாக கட்சியினர் அதிருப்தியுடன் இருந்து வந்த நிலையில் கரூர் நகர பொறுப்பாளர் ஈழபாரதி கடந்த மே 28-ல் நீக்கப்பட்டார். இதையடுத்து பொதுச் செயலாளருக்கு புகார் அனுப்ப கலையரசன் நிர்வாகிகளிடம் கையெழுத்து பெற்றுள்ளார்.

மாவட்டப் பொறுப்பாளரை நீக்க கலையரசன் கையெழுத்துப் பெறுவதாக வைகோவிடம் தவறாக கூறப்பட்டதை அடுத்து, மே 29-ம் தேதி 'ஆபத்து உதவி மாநில செயலாளர்' பொறுப்பில் இருந்து கலையரசன் நீக்கப்பட்டார். அதன்பின் சில மாதங்களுக்கு பிறகு இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கரூர் மாவட்டப் பொறுப்பாளர் கபினி சிதம்பரம் தன்னிச்சையாக செயல்பட்டு வருவ தாகவும், இவரது செயல்பாடு குறித்து வைகோவிடம் பலமுறை எடுத்துக் கூறியும், பொதுச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த நவ. 24-ம் தேதி கரூர் மாவட்டத்தில் இருந்து 8 ஒன்றியச் செயலாளர்கள், 2 நகரச் செயலாளர்கள், மாநில விவசாய அணி முன்னாள் செயலா ளர் மற்றும் மாவட்ட நிர்வாகி ஒருவர் என 12 பேர் கட்சியை விட்டு விலகுவதாகவும், மாவட்ட அவைத் தலைவர் ராமசாமி பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால், கட்சியின் தலைமை இதை கண்டுகொள்ளவில்லையாம்.

வைகோ அதிரடி

இதையடுத்து, அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் கோ.கலையரசன் தலைமையில் 8 ஒன்றியச் செயலாளர்கள், 2 நகரப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 12 பேர் மதிமுகவை விட்டு விலகுவதாக அரவக்குறிச்சியில் நேற்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்த நிலையில், அவர்கள் 12 பேரையும் கட்சியில் இருந்து நீக்குவதாக வைகோ நேற்று அறிவித்துள்ளார்.

மதிமுக உருவாகக் காரணமான அரவக்குறிச்சியில் அக்கட்சி நிர்வாகிகள் விலகியதாகக் கூறியுள்ளதும், கட்சி அவர்களை நீக்கி விட்டதாக அறிவித்திருப்பதும் மதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x