Published : 11 Oct 2018 04:01 PM
Last Updated : 11 Oct 2018 04:01 PM

பாதுகாப்பற்ற நிலையில் மீனவர்கள்; அக்கறை காட்டாத அரசுகள்: முத்தரசன் கண்டனம்

மீனவர்களின் போராட்டத்தை அலட்சியப்படுத்தாமல் தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் மீனவர்கள் உயிருக்கும், உடமைகளுக்கும், தொழிலுக்கும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். மீனவர்கள் இலங்கை கடற்படையாலும், கடல் கொள்ளையர்களாலும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுக் கொடுப்பதில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டாத காரணத்தால் தங்களின் படகுகளை இழந்து, தொழில் செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கின்ற காரணத்தால், விசைப்படகு மீனவர்கள் மிகக் கடுமையான தொழில் நெருக்கடிக்கு ஆளாகியதன் காரணமாக வேலை நிறுத்த போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள், விசைப்படகு மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலை மூவாயிரம் லிட்டராக உயர்த்தி வழங்கப்பட வேண்டும், வரி விலக்குடன் டீசல் வழங்க வேண்டும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகு ஒன்றுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த அக்டோபர் 3-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 9 தினங்களாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அரசு கண்டுகொள்ளாமல் மீனவர்களை புறக்கணித்து வருகின்ற காரணத்தால், 64 மீனவ கிராம பஞ்சாயத்தார் கூடி போராட்டத்தை தீவிரப்படுத்தவது என்றும் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராட்டத்தை தொடர்வது என்றும் முடிவு எடுத்துள்ளனர்.

மீனவர்களின் போராட்டத்தை அலட்சியப்படுத்தாமல், மீனவர் சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்” என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x