Published : 15 Oct 2018 10:56 AM
Last Updated : 15 Oct 2018 10:56 AM

சட்டப்பேரவை அறிவிப்பு அரசாணையாகவில்லை: பள்ளித் தரம் உயர்த்தப்படாததால் தவிக்கும் பழங்குடியின மாணவர்கள்

ஈரோடு மாவட்டம் கொங்காடை பழங்குடியினர் நலத்துறை பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என சட்டப்பேரவை யில் அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டு ஆகியும், அதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை. இதனால், காலாண்டுத்தேர்வினை கடந்த 50 மாணவர்களின் கல்வி கேள்விக் குறியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்துக்கு உட்பட்ட பர்கூர் மலைப் பகுதியில் உள்ள கொங்காடை பழங்குடியினர் கிராமத்தைச் சுற்றி பெரியூர், சுண்டைப் போடு, அக்னிபாவி, செங்குளம், கோயில் நத்தம் என பத்துக்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் ஊராளி எனும் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களுக்கு இதுவரை பேருந்து வசதி கிடைக்காத நிலையில், பல்வேறு தேவை களுக்காக 60 கி.மீ. தூரம் சரக்கு வாகனங்கள் மூலம் அந்தியூருக்கு பயணித்து வருகின்றனர்.

கொங்காடை கிராமத்தில் பழங்குடியினர் நலத்துறை மூலம் 1993-ல் தொடக்கப்பள்ளி தொடங்க பட்டு, 1998-ல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப் பள்ளியைச் சுற்றி பள்ளிக்கல்வித் துறை மூலம் நான்கு தொடக்கப் பள்ளிகளும், மூன்று குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

கொங்காடை நடுநிலைப்பள்ளி யில் படிப்பை முடிக்கும் மாணவர்கள் படிப்பை தொடர வேண்டுமானால், 10 கி.மீ.தொலை வில் உள்ள ஒசூருக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. தொலைதூரத்தில் உள்ள பள்ளிக்குச் செல்ல பேருந்து வசதி இல்லாததும், வனப்பகுதியை கடந்து செல்வதில் பாதுகாப்பு இல்லாததாலும் மாணவர்கள் 8-ம் வகுப்புடன் தங்களது படிப்பை நிறுத்திக் கொண்டு குழந்தைத் தொழிலாளர்களாக மாறும் சூழல் தொடர்ந்து வந்தது.

எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திய மாணவிகளுக்கு குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்படும் சம்பவங்களும் அதிக அளவில் நடந்து வந்தன.

சட்டப்பேரவை அறிவிப்பு

இப்பிரச்சினைக்கு தீர்வு காண இப் பள்ளியை உடனடியாக உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென இப்பகுதி பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தின. பத்தாண்டு கால கோரிக்கையை ஏற்கும் வகையில், கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இப்பள்ளி உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படுமென தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் வகுப்பிற்கான பள்ளிச்சேர்க்கை நடைபெற்றது. ஐம்பது மாணவ, மாணவியர் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தனர். காலாண்டுத் தேர்வு முடிந்து, இரண்டாம் பருவம் தொடங்கியுள்ள நிலையில் கூட, உயர்நிலைப் பள்ளிக்கான அரசாணை வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் நியமனம் இல்லை

மேலும், இதுவரை பள்ளியானது தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி என நிர்வாக ரீதியாகப் பிரிக்கப்படவில்லை. இத்துடன், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தனியாக கட்டிட வசதியோ, விடுதி வசதியோ ஏற்படுத்தப்படவில்லை. தற்போதுள்ள நடுநிலைப் பள்ளியிலில் 7 ஆசிரியர் பணியிடங்களுக்கு நால்வர் மட்டுமே பணியில் உள்ளனர். மூன்று பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் கூடுதலாக ஒன்பதாம் வகுப்பிற்கும் இவர்களே பாடம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நிருபரிடம் பேசிய சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் எஸ்.சி.நடராஜ், மலைக் கிராமங்களில் நடக்கும் குழந்தைத் திருமணங் களைத் தடுக்கவும், குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதைத் தடுக்கவும் இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப் பட்ட முதல் ஆண்டிலேயே 50 மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்ந்துள்ள நிலையில், உரிய அரசாணை பிறப்பிக்கப்படாதது வருத்தத்தையளிக்கிறது. பழங்குடி யினர் நலத்துறை இயக்குநரகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x