Last Updated : 01 Oct, 2018 11:45 AM

Published : 01 Oct 2018 11:45 AM
Last Updated : 01 Oct 2018 11:45 AM

எனது ஆய்வில் நான் மத மாற்றத்தை பரிந்துரைக்கவில்லை: தொல்.திருமாவளவன் பேட்டி

மீனாட்சிபுரத்தில் தலித் சமுதாயத்தினர் இஸ்லாம் மதத்தைத் தழுவியது குறித்து ஆய்வு செய்த தொல்.திருமாவளவன், அந்த ஆய்வின் மூலம் மத மாற்றத்தைத் தழுவ வேண்டும் எனப் பரிந்துரைப்பது தனது நோக்கமல்ல எனத் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சமீபத்தில் தனது பி.எச்.டி. ஆய்வை திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தார். திருநெல்வேலி மாவட்டம், மீனாட்சிபுரத்தில் தலித் சமுதாய மக்கள் அதிக அளவில் இஸ்லாம் மதம் தழுவியதை திருமாவளவன் தனது ஆய்வுப் பொருளாக தேர்ந்தெடுத்திருந்தார்.

இந்நிலையில், அவருடைய இந்த ஆய்வு மத மாற்றத்தை வலியுறுத்துவது போன்று உள்ளது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியால் விமர்சிக்கப்பட்டது. புதிய தமிழகம் கட்சி, அதிக அளவிலான தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினரின் பிரதிநிதிக் கட்சியாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், தனது ஆய்வு குறித்து ‘தி இந்து’ ஆங்கிலம் நாளிதழில் தெளிவுபடுத்தியுள்ள தொல்.திருமாவளவன், அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவுவதை வாதிட்டபோது, மீனாட்சிபுரம் தலித் மக்கள் எதற்காக இஸ்லாம் மதத்தைத் தழுவினர் என்பதை அறியவே அதுகுறித்து தாம் ஆய்வு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

மீனாட்சிபுரம் மக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவிய தருணத்தில், வளைகுடா நாடுகளில் இருந்து அவர்கள் பணம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்ததது. அதனால், இந்தக் குற்றச்சாட்டு உண்மைதானா என்பது குறித்தும் ஆய்வு செய்ய விரும்பியதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

“ஆனால், மீனாட்சிபுரத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறிய தலித் மக்களின் சமூக-பொருளாதாரம், மற்ற பகுதிகளில் உள்ள தலித் மக்களின் நிலைமையை விட தற்போது முன்னேறியுள்ளது. அவர்கள் இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் அவமதிப்பு, பாகுபாடு இல்லாதவர்களாக உணர்கிறார்கள்” என திருமாவளவன் தெரிவித்தார்.

“நீண்ட காலமாக அங்கு நிலவி வந்த பாகுபாடுதான் அவர்களின் மத மாற்றத்திற்கான முக்கியக் காரணி. அந்தக் கிராமத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலையையடுத்து நிகழ்ந்த போலீஸ் வன்முறை அதனை மேலும் அதிகரித்தது” என விளக்குகிறார் திருமாவளவன். மீனாட்சிபுரத்தில் இஸ்லாம் மதத்தை தழுவிய முதல் தலைமுறையினருடன் தனது ஆய்வுக்காக நேரடியாக அவர் கலந்துரையாடி இருக்கிறார்.

‘புதிதல்ல’

மீனாட்சிபுரத்தில் பெருமளவில் மத மாற்றம் நடைபெறவில்லை எனவும், 75% குடும்பத்தினர் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பிவிட்டதாகவும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளது குறித்து திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “அவர்கள் மதம் மாற முயற்சி செய்த சமயத்தில் கூட, 200 குடும்பங்களில் 20 குடும்பத்தினர் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொண்டு இந்து மதத்திலேயே இருந்துவிட்டனர். 180 குடும்பங்கள் மட்டுமே இஸ்லாம் மதத்தைத் தழுவினர். இஸ்லாம் மதத்தைத் தழுவியவர்களும், தழுவாதவர்களும் சுமுகமான உறவைக் கடைப்பிடித்து வருகின்றனர். அவர்களின் திருமண நடைமுறைகள் ஒன்றாகவே உள்ளன. சிலர் மீண்டும் இந்து மதத்திற்கு மாறியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

மீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறுவது புதிதல்ல எனவும், 1960-களிலேயே சில குடும்பங்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியதாகவும் கூறியுள்ளார். இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்படும் தங்கராஜ், வேறு சாதியில் திருமணம் புரிந்து, இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின் யூசுஃப் என்ற பெயருடன் தனது கிராமத்திற்கு வந்திருக்கிறார்.

இஸ்லாமுக்கு மாறிய பின்பு தலித் பெண்கள் சுதந்திரமாக இல்லை எனவும், புர்கா அணிந்துகொண்டு வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாக எழும் குற்றச்சாட்டை திருமாவளவன் மறுக்கிறார். “அவர்கள் தங்கள் தலையை மட்டும் மறைக்கின்றனர். விவசாயக் கூலிகளாக தங்கள் பணிகளை அவர்கள் தொடர்கின்றனர். பள்ளிக்கூடத்திற்கே செல்லாத பாத்திமா, குர்-ஆன் படிக்கிறார். படிக்கவும்,எழுதவும் முடிவதாக என்னிடம் தெரிவித்திக்கிறார்” என திருமாவளவன் கூறுகிறார்.

தனது பி.எச்.டி வழிகாட்டிகள் கே.சொக்கலிங்கம் புகழ்பெற்ற குற்றவியல் ஆய்வாளர் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எனவும், வெளியிலிருந்து வரும் தேர்வுக் கண்காணிப்பாளர் பாஜ்பாய் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.Sign up to receive our newsletter in your inbox every day!

 
x