Published : 04 Oct 2018 03:20 PM
Last Updated : 04 Oct 2018 03:20 PM

நாங்கள் தனியாக இருக்கின்றோம்; யாருடனும் கூட்டணி கிடையாது: முதல்வர் பழனிசாமி

நாங்கள் தனியாக இருக்கின்றோம், யாருடனும் கூட்டணி கிடையாது என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை வேலம்மாள் கல்லூரியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தேர்தல் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம்:

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் தொடர்பாக விரைவிலே பிரதமரை சந்திப்பேன். தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று அப்போது வலியுறுத்துவேன். நிச்சயமாக எய்ம்ஸ் மருத்துவமனை வரும், எந்தவித ஐயப்பாடும் தேவையில்லை.

தமிழகத்தில் 7 ஆம் தேதியிலிருந்து பருவ மழை பொழியும் என்று வானிலை மையம் சொல்லியிருக்கிறது. அதற்கு எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?

3 முறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளை பெற்று அதற்குத்தக்க ஏற்பாட்டை அரசு செய்திருக்கிறது. வெள்ளத்தடுப்பு எச்சரிக்கையை, எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்பதில் அரசு முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்குத் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது.

தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை, தேர்தலே அறிவிக்காத நிலையில் கூட்டணி பற்றி எப்படி பேசமுடியும். இப்பொழுது இருக்கின்ற பிரச்சினை, நாங்கள் தனியாக இருக்கின்றோம், யாருடனும் கூட்டணி கிடையாது, அந்த அடிப்படையில் நான் என்னுடைய கருத்தைச் சொல்கிறேன்.

கருணாஸ் சபாநாயகரை மாற்ற கோரியது..

ஆளும்கட்சியில், இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஒரு சபாநாயகரை, அதாவது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலே என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். சட்டம் என்ன சொல்கிறது என்பதை பார்க்க வேண்டும்.

ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன்...

திருப்பரங்குன்றத்து மக்கள் நல்ல விவேகமான மக்கள், நன்றாக சிந்தித்து செயலாற்றக் கூடியவர்கள், யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று தீர்க்கதரிசனமாக முடிவு செய்யக் கூடியவர்கள். திருப்பரங்குன்றம் அதிமுகவின் தொகுதி. ஆகவே, மக்கள் அதிமுக மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள். மதுரை மாவட்டம் ஒரு ராசியான மாவட்டம். இங்கே தொட்டது துலங்கும். இங்கே எது ஆரம்பித்தாலும் அது வெற்றியோடு முடியும். அந்த அடிப்படையில் முதன்முதலாக மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலின் அதிமுக பணியை நாங்கள் துவக்கியிருக்கின்றோம்.

என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x