Published : 23 Oct 2018 04:23 PM
Last Updated : 23 Oct 2018 04:23 PM

அமைச்சர் ஜெயக்குமார் மீதான பாலியல் புகார் குறித்து உரிய விசாரணை தேவை: மார்க்சிஸ்ட்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீதான பாலியல் புகார் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீது பாலியல் ரீதியான ஒரு குற்றச்சாட்டு சமூக வலைதளத்தில் பரவலாக முன் வந்துள்ளது. ஒரு குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் தந்தை பெயராக டி.ஜெயக்குமார் என்பதை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ளது. உதவி கேட்டு சென்ற பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ததாகவும், அதன் தொடர்ச்சியாக அப்பெண் கருவுற்று குழந்தை பெற்றதாகவும், இதற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

இது அவதூறு என அமைச்சர் ஜெயக்குமார் கூறினாலும் வெகுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை இது எழுப்புகிறது. நாடு முழுவதும் அரசியல் மற்றும்அதிகார செல்வாக்கு உள்ளவர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வந்துள்ள நிலையில் இப்புகார் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

முறையான விசாரணையின் மூலமாகவே உண்மையைக் கண்டறிய முடியும். பாலியல் வல்லுறவு என்பது ஒரு கடுமையான கிரிமினல் குற்றம் என்கிற அடிப்படையில் உரிய முக்கியத்துவத்தோடு இப்பிரச்சினை அணுகப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் அவர் குடும்பத்திற்கும் முழுமையான பாதுகாப்பு அளிப்பதோடு, முறையான விசாரணையை தமிழக அரசு நடத்திடவும், விசாரணை முடிவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” என பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x