Published : 14 Aug 2018 12:39 PM
Last Updated : 14 Aug 2018 12:39 PM

ஊழலையும், வறுமையையும் ஒழிக்கும் நாளே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திர தினம்: அன்புமணி ராமதாஸ்

ஊழலையும், வறுமையையும் ஒழிக்கும் நாளே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திர தினம் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவின் 72-வது சுதந்திர திபம் நாளை கொண்டாடப்படும் நிலையில் நாடு முழுவதும் வாழும் சகோதர, சகோதரிகளுக்கு எனது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு கடந்த 71 ஆண்டுகளில் ஈடு இணையற்ற எத்தனையோ சாதனைகளைப் படைத்திருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சியில் உலகின் பல நாடுகளுக்கு இந்தியா வழிகாட்டியாகத் திகழ்கிறது. தகவல் தொழில்நுட்பப் புரட்சி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பிற சேவைகள், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் வளர்ச்சி உலக நாடுகளால் எட்டிப்பிடிக்க முடியாதது. ஆனாலும், உலகில் அதிக வறுமையும், தற்கொலைகளும் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இதற்குக் காரணம் இந்தியா ஒன்றாக இல்லை என்பதும், வளமான இந்தியா, வறுமை நிறைந்த இந்தியா என இரு இந்தியாக்கள் இருப்பதும் தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் விவசாயம் முதல் உற்பத்தித் துறை வரை அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்தங்கியுள்ளது. இதற்குக் காரணம் தமிழக அரசு நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவது தான். எங்கும் ஊழல்... எதிலும் ஊழல் என்பதால் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்காக முதலீடு செய்ய எவரும் தயாராக இல்லை. அதனால் தொழில்துறையில் தமிழகம் முன்னேறுவதற்குப் பதிலாக பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படாததால் தமிழகத்தில் படித்த இளைஞர்கள் வேலையின்றித் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் மக்கள் உயிர்வாழ மிகவும் அவசியம் வேளாண்ம தான் என்றாலும், அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. வேளாண் விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்துக் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ள போதிலும், நடைமுறையில் வேளாண் விளைபொருட்களுக்கும் லாபகரமான விலை கிடைப்பதில்லை. விவசாயிகளுக்கு உதவும் வகையில் பாசன வசதி செய்து தரப்படவில்லை; விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்ய சந்தை வசதிகள் செய்து தரப்படவில்லை என்பன உள்ளிட்ட காரணங்களால் விவசாயத் தொழில் உன்னதமாக இல்லை. மாறாக வறட்சி மற்றும் கடன் சுமையால் விவசாயிகளின் உயிரெடுக்கும் தொழிலாகவே உள்ளது.

அரசு நிர்வாகத்தின் நிலைமை அதைவிட மோசமாக உள்ளது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதிலோ, வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதிலோ ஆட்சியாளர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. மாறாக, பதவியில் இருக்கும் வரை எந்த அளவுக்கு கொள்ளையடிக்க முடியுமோ, அந்த அளவுக்கு கொள்ளை அடிக்க வேண்டும் என்பதில் தான் ஆட்சியாளர்கள் குறியாக உள்ளனர். ஊழலை ஒழிப்பதற்காக லோக் ஆயுக்தா அமைப்பை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று பாமக போராடி வந்த நிலையில், உச்ச நீதிமன்றமும் நெருக்கடி கொடுத்ததால் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை தமிழக அரசு அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளது. ஆனால், அந்தச் சட்டத்தில் ஊழல்வாதிகளை தண்டிக்கப் பயனுள்ள பிரிவுகள் எதுவும் இல்லாததால் அதன் அடிப்படை நோக்கமே தகர்ந்து விட்டது.

வறுமையையும், ஊழலையும் ஒழிக்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது. இந்த இரு தீமைகளும் ஒழிக்கப்படும் நாளில் தான் இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு முன்னேற முடியும். எனவே, வறுமையையும், ஊழலையும் வளர்த்தெடுக்கும் பினாமி ஊழல் அரசை அகற்றி, நல்லாட்சி அமையும் நாள் தான் தமிழக மக்களுக்கு உண்மையான சுதந்திர தினம் ஆகும். அந்த இலக்கை நோக்கிப் பயணிக்கவும், அதற்காக கடுமையாக உழைக்கவும் இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம்” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x