Published : 13 Aug 2018 11:44 AM
Last Updated : 13 Aug 2018 11:44 AM

திமுகவின் உண்மையான உடன்பிறப்புகள் என்னுடன்தான் உள்ளனர்; காலம் பின்னால் பதில் சொல்லும்: கருணாநிதி நினைவிடத்தில் அழகிரி பேட்டி

திமுகவின் உண்மையான விசுவாசமான தொண்டர்கள் என்னிடம்தான் உள்ளனர். இதற்கு காலம் பின்னால் பதில் சொல்லும் என்று அழகிரி கூறியுள்ளார். கருணாநிதியின் நினைவிடத்தில் மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழியுடன் அழகிரி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தென் மாவட்ட திமுகவில் மு.க.அழகிரி மத்திய அமைச்சராகவும், தென் மண்டல அமைப்புச் செயலாளராகவும் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்தபோது, இடைத்தேர்தலுக்கு தனி ஃபார்முலாவையே உருவாக்கினார்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வில் உள்ள குளறுபடிகளைக் கூறி ஸ்டாலினை விமர்சித்த அவர் 5 தொகுதிகள் கூட திமுக வெல்லாது என்று பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அழகிரிக்கு கட்சிக்குள் நெருக்கடி அதிகரித்தது. அதன்பிறகு அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

பின்னர் 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவர் கருத்து கூறியிருந்தார். திமுகவிலிருந்து வேறு கட்சிக்குப் போவதாக கருத்து உலாவியபோது, 'நான் என்றும் திமுககாரன் தான்' என்று அடித்துக் கூறினார் அழகிரி.

அழகிரியின் ஆதரவாளர்கள் ஸ்டாலின் பக்கம் சேர்ந்தனர். அழகிரியும் அரசியலில் ஆர்வமில்லாமல் ஒதுங்கியே இருக்கிறார். அதனால் அவரது ஆதரவாளர்களும் அமைதியாகி விட்டனர். திமுகவினர் அழகிரியைக் கண்டுகொள்வதில்லை.

கருணாநிதி மறைந்த நிலையில் அழகிரி, ஸ்டாலின் கனிமொழி, தமிழரசு, செல்வி உள்ளிட்டோர் ஒற்றுமையாக சடங்குகளைச் செய்தனர். மறுநாள் மாலை அஞ்சலி செலுத்தும்போது கருணாநிதின் மகன், மகள்கள் மட்டும் ஒன்றாக ஒற்றுமையாக ஒன்றாக நின்று மாலையை நினைவிடத்தைல் வைத்து மரியாதை செலுத்தினர்.

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவரது மறைவுக்கு பிறகு இறுதிச்சடங்கு உள்ளிட்ட நிகழ்வுகளில் அழகிரி, ஸ்டாலின் ஒன்றாக பக்கத்தில் நின்றிருந்தனர். ஆனாலும் ஒருநாள் கூட இருவரும் முகம் கொடுத்து பேசிக்கொள்ளவில்லை. கருணாநிதியின் மறைவுக்குப் பின் கட்சியில் அழகிரியின் பொறுப்பு என்ன என்ற கேள்வி எழுகிறது.

கட்சிக்குள் அழகிரிக்கு பொறுப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை அவரது ஆதரவாளர்களால் எழுப்பப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் விரைவில் கூட உள்ளது.

 அழகிரிக்கு மீண்டும் முக்கியத்துவமான பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் இன்று காலை மு.க.அழகிரி தனது மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி உள்ளிட்டோருடன் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்ளிடம் அழகிரி கூறியதாவது:

என் அப்பாவிடம் எனது ஆதங்கத்தை வேண்டிக் கொண்டேன். என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்குத் தெரியாது. என்னுடைய தலைவர் கருணாநிதியின் உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் என் பக்கம்தான் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள அத்தனை விசுவாசிகளும் என் பக்கம் இருக்கிறார்கள். அவர்கள் என்னை ஆதரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே இதற்கு காலம் பின்னால் பதில் சொல்லும் என்று கூறி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அழகிரி தெரிவித்தார்.

பின்னார் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசினார்.

உங்கள் ஆதங்கம் கட்சி தொடர்பானதா? குடும்பம் தொடர்பானதா?

கட்சி தொடர்பானதுதான்.

தலைமைச் செயற்குழு நடைபெறுகிறது, அது பற்றி உங்கள் கருத்து?

நான் இப்போது திமுகவில் இல்லை. திமுக செயற்குழு பற்றியெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள். எனக்குத் தெரியாது.

மீண்டும் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதா?

அதுபற்றி எனக்குத் தெரியாது. என்னுடைய ஆதங்கத்தைத் தலைவரிடம் கூறியுள்ளேன்.

இவ்வாறு அழகிரி பதிலளித்தார்.

கருணாநிதி உயிருடன் இருந்தவரை அமைதிகாத்த மு.க.அழகிரி, அவரது மறைவுக்கு பின் பகீரங்கமாக திமுக தொண்டர்கள் தனக்குப் பின்னால்தான் உள்ளனர் என்று பேட்டி அளித்துள்ளது திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x