Last Updated : 01 Aug, 2018 12:47 PM

 

Published : 01 Aug 2018 12:47 PM
Last Updated : 01 Aug 2018 12:47 PM

ஸ்டெர்லைட் போராட்டம்; ஹரிராகவன் மீதான தேசிய பாதுகாப்புச் சட்ட நடவடிக்கை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வழக்கறிஞர் ஹரிராகவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த சத்தியபாமா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது கணவர் ஹரிராகவன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் மக்கள் அதிகார அமைப்பின் மாவட்ட செயலாளராக உள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மே 22 ஆம் தேதி 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கலவரத்திற்கு தூண்டியதாக எனது கணவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். ஹரி ராகவன் மீதான 90-க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஜூலை 24 ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுவாமிநாதன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், ஜூலை 26 ஆம் தேதி ஜாமீன் உத்தரவை சிறைத்துறையில் கொடுத்தபின்பு தான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யபட்டிருப்பது தெரியவந்தது.

எனவே எனது கணவர் ஹரி ராகவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்” என கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கு மீதான முந்தைய விசாரணையின்போது ஹரி ராகவன் மீதான 90-க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஜூலை 24 ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுவாமிநாதன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஜூலை 26 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு இந்த ஜாமீன் உத்தரவை பாளையங்கோட்டை சிறையில் வழங்கும்போது ஹரி ராகவன் மீது 6.10 மணிக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யபட்டுள்ளது என கூறினர். போலீஸார் நீதிமன்ற உத்தரவை மறைத்து மாவட்ட ஆட்சியரிடம் ஹரி ராகவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய கூறி பரிந்துரைத்துள்ளனர். இந்த செயல் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாக உள்ளது, மேலும் ஹரிராகவனை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறினார்

இதனை விசாரித்த நீதிபதிகள் இது ஜனநாயக நாடா? அல்லது போலீஸ் நாடா? என அரசுக்கு கேள்வி எழுப்பினார்கள். மேலும் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில் இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது எப்படி என கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஹரிராகவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் வழக்குபதிவு செய்வதற்கான ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஜூலை 20 -ம் தேதியே போலீஸ் தரப்பில் கொடுக்கபட்டது எனவும், ஆனால் மாவட்ட ஆட்சியர் 26- ம் தேதி தான் கையெழுத்திட்டார் எனவும் கூறபட்டது.

இதனைகேட்ட நீதிபதிகள் ‘‘ஒரு மாவட்ட ஆட்சியரின் கையெழுத்து தனி நபரின் தலையெழுத்தை மாற்றிவிடும், குற்றம்சாட்டபட்டவர்கள் தேவையில்லாமல் பல மாதங்கள் வரை சிறையில் இருக்கும் சூழ்நிலை நேரிடும். இது தனிநபரின் சுதந்திரத்தை பாதிப்பதாகும்.எனவே வரும்காலங்களில் இதுபோன்ற உத்தரவுகளை பிறபிக்கும்போது அப்போதைய சூழ்நிலைகளை தெரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும்’’ என அறிவுறுத்தினார்.

மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கலவரத்தில் வழக்கறிஞர் ஹரிராகவன் மீது தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கு பதிவை ரத்து செய்து வழக்கினை முடித்துவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x