Published : 05 Jul 2018 09:17 AM
Last Updated : 05 Jul 2018 09:17 AM

பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் சென்னை சாலைகளில் பகல் நேரத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க முடியாது: போக்குவரத்து காவல் அதிகாரிகள் திட்டவட்டம்

சென்னை மாநகர சாலைகளில் பகல் நேரத்தில் திரைப்பட படப் பிடிப்பு நடத்தினால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டு, ஒட்டுமொத்த மக்களும் அவதிப்படுவார்கள் என்பதால், படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க முடியாது என்று போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகர சாலைகளில் திரைப்பட படப்பிடிப்பு நடத்தப் படுவது வழக்கமாக இருந்தது. கடந்த 2010-ல் கிண்டி மேம்பாலத்தில் ‘எந்திரன்’ படப்பிடிப்பு நடந்தபோது, போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அதுமுதல், சென்னை மாநகர சாலைகளில் பகல் நேரங்களில் படப்பிடிப்பு நடத்த நிரந்தர தடை விதிக்கப்பட்டது. இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் படப்பிடிப்பு நடத்த போலீஸார் அனுமதி வழங்குகின்றனர்.

இதேபோல, மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் கடற்கரை வரை படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு தடை விதித்தது.

திரைப்படத்தில் கோயில் காட்சியை வைத்தால் அந்தப் படம் வெற்றி பெறும் என்று சில தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர். காஞ்சிபுரம் வரதராஜப் பெரு மாள் கோயிலில் படப்பிடிப்பு நடத்தப்பட்டபோது, கோயிலின் புராதன சின்னங்கள் சேதமடைந்தன. இதையடுத்து, கோயில்களில் படப்பிடிப்பு நடத்த இந்து சமய அறநிலையத் துறை தடை விதித்தது.

தமிழக பொதுப்பணித் துறை யின் கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இதில், சென்னை எழிலக வளாகத்தில் உள்ள கட்டிடம் உட்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை புராதன கட்டிடங்கள் ஆகும். லட்சக் கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு, இந்தக் கட்டிடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து, அதிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதுபோல அலுவலகங்கள், பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த தலைமைச் செயலகத்தில் அனுமதி பெறப்பட்டாலும், சம்பந்தப்பட்ட பகுதி போலீஸாரும் அனுமதி தரவேண்டும். ஆனால், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ள மற்றும் பிரச்சினைக்குரிய இடங்களில் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க போலீஸார் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

இதுபோன்ற கட்டுப்பாடுகளால் சென்னையில் படப் பிடிப்பு நடத்த முடியாமல் பலரும் வெளி மாநிலங்களுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்துகின்றனர். எனவே, இந்தத் தடைகளை நீக்கக் கோரி சென்னை மாநகர போலீஸாரிடமும், தமிழக அரசிடமும் திரைப்படத் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, “சென்னை மாநகர சாலைகளில் பகல் நேரத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கவே முடியாது. சாலைகளை ஒட்டியுள்ள பொது இடங்கள், வணிக வளாகங்கள் போன்ற பகுதிகளி லும் பகல் நேரத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க மாட்டோம். குறிப்பிட்ட சிலரது வசதிக்காக ஒட்டுமொத்த மக்களையும் போக்குவரத்து நெரிசலில் சிக்கவைக்க முடியாது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x