Published : 10 Jul 2018 07:26 AM
Last Updated : 10 Jul 2018 07:26 AM

முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்யும் லோக் ஆயுக்தா சட்டம் பேரவையில் நிறைவேற்றம்: அதிகாரம் இல்லாத அமைப்பாக இருப்பதாக கூறி திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் வெளிநடப்பு

முதல்வர், அமைச்சர்கள், அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படுகிறது. இதற்கான மசோதா, சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

லோக் பால் சட்டத்தை கடந்த 2013-ம் ஆண்டில் மத்திய அரசு இயற்றியது. இதன்படி, அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க வேண்டும். முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் மற் றும் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை இந்த அமைப்பு விசாரித்து நடவடிக்கை எடுக்கும். கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம், மேற்கு வங்கம், தெலங்கானா உள்ளிட்ட 11 மாநிலங்களில் இந்த அமைப்பு உருவாக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில், ‘லோக் ஆயுக்தா’ சட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக ஜூலை10-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந் தது.

உச்ச நீதிமன்றத்தின் கெடு இன்று முடிய உள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பேரவைக் கூட்டத் தொடரின் இறுதி நாளான நேற்று காலை, தமிழ்நாடு லோக் ஆயுக் தா அமைப்பை உருவாக்குவதற் கான சட்ட மசோதாவை பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர் திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய் தார்.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் (அமைச்சர் என்பதில் முதல்வரும் அடங்கும்), எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், மாநில அரசு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் இந்த அமைப்பில் விசாரிக்கப்படுவர். மேலும், அரசால் முழுவதுமாக அல்லது பகுதியளவில் நிதி அளிக்கப்பட்ட, அரசின் ஆளுகைக்கு உட்பட்ட அமைப்பு, வாரியம், நிறுவனம், கழகம் அல்லது தன்னாட்சி பெற்ற எந்த ஒரு அமைப்பின் தலைவர், உறுப்பினர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளையும் இந்த சட்டத் தின் மூலம் விசாரிக்கலாம்.

லோக் ஆயுக்தா அமைப்பில் தலைவர், 4 உறுப்பினர்கள் இடம் பெறுவர். தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்து பெயர் பட்டியலை தயாரிக்க 3 பேர் கொண்ட தேர்வுக் குழு தனியாக அமைக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் துறை,சட்டப்பேரவை, நிதித் துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் முடிந்ததும் லோக் ஆயுக்தா உள்ளிட்ட 19 மசோதாக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. லோக் ஆயுக்தா சட்ட மசோதா மீது விவாதம் நடந்தது.

இதில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘இந்த சட்ட முன்வடிவை வரவேற்கிறேன். ஆனால், மசோதா வில் அமைச்சர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வரும் இடம்பெறுவாரா, இல்லையா என்பது தெளிவாக இல்லை. மற்ற மாநிலங்களின் லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவில் குறிப்பிட்டிருப்பது போல முதல்வர் என்று தெளிவாக குறிப்பிடப்படவில்லை. லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் முதல்வர், பேரவைத் தலைவர், எதிர்கட்சித் தலைவர் மட்டும் இடம்பெற்றுள்ளனர். வெளிப்படைத்தன்மைக்கு இந்த எண்ணிக்கை போதாது.

எனவே, உயர் நீதிமன்ற நீதிபதி, துறை சார்ந்த அதிகாரியையும் இதில் சேர்க்க வேண்டும். புகார் கொடுப்பவரின் பாதுகாப்புக்கான பிரிவும் சேர்க்கப்பட வேண்டும். அரசு ஒப்பந்தம், நியமனம், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளை விசாரிக்கும் வகையில் திருத்தம் வேண்டும். இந்த திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய மசோதாவை பேரவையின் தேர் வுக் குழுவுக்கு அனுப்ப வேண் டும்’’ என்றார்.

இதே கருத்தை, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகமது அபூபக்கர் ஆகியோரும் வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், “வலுவான லோக் ஆயுக்தா கொண்டுவர வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். அரசியலமைப்புச் சட்டத்தில் 101 முறை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், லோக் ஆயுக்தா சட்டத்தில் திருத்தம் தேவைப்பட்டால் பின் னர் அதைச் செய்யலாம். இப் போது இந்தச் சட்டத்தை ஒரு மன தாக நிறைவேற்றித் தாருங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, ‘‘லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவில் அமைச்சர் என்பது முதல்வர் உள்ளடலங்கலாக என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.

ஆனால், இந்த விளக்கத்தை திமுக ஏற்கவில்லை. அதிகாரம் இல்லாத அமைப்பாக லோக் ஆயுக்தா கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பேரவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பாததாலும் வெளிநடப்பு செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துவிட்டு வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்திருந்த தமிழ்நாடு நில உரிமையாளர், வாடகைதாரர் பொறுப்புச் சட்டத் திருத்தம், தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத் திருத்தங்கள், தமிழ்நாடு வனத் திருத்தச் சட்டம் ஆகியவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

அதேபோல, தமிழ்நாடு வேளாண்மைப் பணி, சென்னை மாநகராட்சி திருத்தச் சட்டம், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் திருத்தச் சட்டம், தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியை தேசிய சட்ட பல்கலைக்கழகமாக பெயர் மாற்றம் செய்வதற்கான சட்டத்திருத்தம் உள்ளிட்ட 18 மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.

(லோக் ஆயுக்தா சட்ட பிரிவுகள்.. கடைசிப் பக்கம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x