Published : 07 Jul 2018 06:16 PM
Last Updated : 07 Jul 2018 06:16 PM

நீட் நுழைவுத்தேர்வை பல அமர்வாக நடத்துவது முறைகேடுகளுக்கே வழிவகுக்கும்: மருத்துவர் சங்கம்

நீட் நுழைவுத்தேர்வை பல அமர்வாக நடத்துவது முறைகேடுகளுக்கே வழிவகுக்கும், நீட் நுழைவுத்தேர்வு கட்டணத்தையும் குறைக்கவேண்டும் என்று டாக்டர். ஜி.ஆர்.ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீத்திரநாத் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் இரண்டு முறை நடத்தப்படும். ஒவ்வொரு முறையும் இத்தேர்வு எட்டுக்கும் மேற்பட்ட அமர்வுகளில் நடத்தப்படும்.

இரண்டு தேர்வுகளையுமே மாணவர்கள் எழுதலாம். எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண்ணை மாணவர்கள் பெறுகிறார்களோ அது மாணவர் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் ஜவடேகர் கூறியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில்,பல்வேறு மாநிலத்தவர் பல்வேறு பாடத்திட்டங்களில் படித்து நீட் தேர்வை எழுதும்போது அதை பல அமர்வுகளில் நடத்துவது முறைகேடுகளுக்கும், பாரபட்சங்களுக்கும், குழப்பங்களுக்கும் வழிவகுக்கும்.ஒரே சீரான அடிப்படையில் தேர்வுகள் அமையாது. வெவ்வேறு வினாத்தாள்கள் இடம் பெறும்.தேசிய அளவில் தரவரிசைப் பட்டியல் உருவாக்குவதில் பாராபட்சம் ஏற்படும். இது மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது.

எனவே, நீட் தேர்வை பல்வேறு அமர்வுகளில் நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும். மேலும் , நீட் நுழைவுத் தேர்வுக்காக மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே தேர்வு நடத்த செலவாகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே,நீட் தேர்வுக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து முழுமையாக விலக்களிக்க வேண்டும்'' என்று ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x