Published : 24 Jul 2018 03:27 PM
Last Updated : 24 Jul 2018 03:27 PM

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிமுக தொடங்கி விட்டது; எங்களை யாராலும் வெல்ல முடியாது: முதல்வர் பழனிசாமி பேட்டி

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிமுக தொடங்கி விட்டது என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த சிங்கக் குட்டிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயா என இன்று பெயர் சூட்டினார். இதையடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.

பெண் சிங்கக் குட்டிக்கு ஜெயா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்கள் புலிகளை அருகில் நின்று நன்றாக ரசிப்பதற்காக 27 லட்ச ரூபாயில் நவீன கூண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உயிரியல் பூங்காவும் தமிழக அரசும் இதனை ஏற்பாடு செய்யதிருக்கிறது. முன்பு தூரத்தில் இருந்துதான் புலிகளைப் பார்க்க முடியும். அருகில் நின்று பார்க்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்தும் சுற்றுலா பயணிகளிடமிருந்தும் கோரிக்கை வந்ததையடுத்து, இந்த கூண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. வர்தா புயலில் முறிந்த மரங்கள் அகற்றப்பட்டு புதிதாக நடப்பட்டுள்ளன. அவை விலங்குகளால் சேதம் அடையாமல் இருக்க கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. சொட்டு நீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிஹார் மாநிலத்தில் இருந்து ஒரு மாதத்தில் காண்டாமிருகம் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்படும்.

குடிமராமத்து பணிகளுக்கு டெண்டர் விடுவதில் முறைகேடு என குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

ஏரி, குளங்களை தூர்வாரி நீரை சேமித்து வைத்து உபயோகிக்க தமிழக அரசு குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்துகிறது. முதல்கட்டமாக சோதனையளவில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 1,519 எரிகள் தூர்வாரப்பட்டிருக்கிறது. மக்கள் இத்திட்டத்தை வரவேற்றுள்ளனர். இதனை விரிவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, 1,518 ஏரிகளை தூர்வாரும் பணி 318 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. ஏரிகள், குளங்களில் பாசன வசதி பெறும் விவசாயிகளின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதில் டெண்டர்கள் இல்லை. விவசாயிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு ஏரி தூர்வாருதல், ஆழப்படுத்துதல், மதகுகளை சுத்தம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது.

உயர்கல்வி ஆணையம் அமைக்கப்பட்டு பல்கலைக்கழகங்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் நிதி ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருக்கிறாரே?

உயர்கல்வி ஆணையம் மாநில அரசைப் பாதிக்கும். அதனால் அதனை எதிர்க்கிறோம். இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள். ஏற்கெனவே இருக்கும் முறையே தொடர வேண்டும் என தெரிவித்திருக்கிறோம்.

மேகதாது அணை தொடர்பாக தமிழக முதல்வரை சந்திப்போம் என கர்நாடக முதல்வர் குமாரசாமி சொல்லியிருக்கிறாரே?

கர்நாடக முதல்வர் இப்போதுதான் முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார். கடந்த கால வரலாறு அவருக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. 2 மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் போதிய மழை இல்லாததாலும், மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததாலும் கடும் வறட்சி ஏற்பட்டது. 20 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரம் மேட்டூர் அணை. அதனால் கர்நாடகத்திடம் 3 டிஎம்சி தண்ணீர் கேட்டு கடிதம் எழுதப்பட்டது. கர்நாடக அணைகளில் அப்போது 32 டிஎம்சி தண்ணீர் இருந்தது. ஆனால், கர்நாடக அரசு தண்ணீர் தர மறுத்துவிட்டது. மேகதாதுவில் அணை கட்டினால் தண்ணீர் தருவார்களா என்பதை சிந்திக்க வேண்டும்.

துணை முதல்வர் ஓபிஎஸ் திடீரென டெல்லி சென்றிருப்பதற்கு காரணம் என்ன?

அவர் திடீரென செல்லவில்லை. அவருடைய தம்பி உடல் நலம் சரியில்லாதபோது உடனடியாக விமானத்தைக் கொடுத்து உதவியதற்காக நன்றி சொல்வதற்காக டெல்லி சென்றுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் ஆரம்பித்து விட்டனவா?

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. பணிகளை ஆரம்பித்துவிட்டோம். மதுரையில் 1000 பேர் சைக்கிள் பேரணி சென்றுள்ளனர். அவர்கள் அரசின் சாதனைகளை எடுத்துச்சொல்லப் புறப்பட்டுள்ளார்கள். அப்போதே பிரச்சாரம் தொடங்கிவிட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது மத்திய அரசுக்கு எதிராக வாக்களித்திருப்பார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறாரே?

மற்ற மாநில முதல்வர்கள் சொல்வது நமக்குப் பொருந்தாது. மத்திய அரசுடன் இணக்கமான உறவை மாநில அரசு வைத்துள்ளது. மாநில வளர்ச்சிக்காகத் தான் மக்கள் நம்மை தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புகின்றனர். யாருடனும் கூட்டு கிடையாது. எதிரியும் கிடையாது. மாநிலப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என தேர்ந்தெடுக்கின்றனர். அதனால், மத்திய அரசுக்கு ஆதரவு அளித்தோம்.

 காவிரி ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 22 நாட்கள் குரல் கொடுத்தனர். எந்த முதல்வராவது நமக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்களா? அவர்களுடைய நலன் தான் அவர்களுக்கு முக்கியம். தெலுங்கு தேசம் தான் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அக்கட்சிக்கும் பாஜகவுக்கும் என்ன பேச்சுவார்த்தை என்பது தெரியவில்லை. 4 ஆண்டுகள் கூட்டணியில் இருந்துவிட்டுப் பிரிந்தனர். இப்போது நாம் வெற்றி பெற்றுள்ளோம். காவிரி ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு அமைப்புகளின் கூட்டமும் நடைபெற்றுள்ளது.

கூட்டணி எப்போது முடிவு செய்யப்படும்?

தேர்தல் சந்தர்ப்பத்தில் தான் முடிவு செய்ய முடியும். ஆயத்தப் பணிகளை எந்தக் கட்சியும் எடுக்கவில்லையே. தேர்தலின்போது தான் கூட்டணி தெரியும்.

புதிய கட்சிகளால் அதிமுகவுக்கு பாதிப்பு இருக்குமா?

28 ஆண்டுகாலம் ஆட்சி செய்துள்ளது அதிமுக. மக்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அவை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே வளர்ச்சி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x