Published : 20 Jul 2018 07:03 PM
Last Updated : 20 Jul 2018 07:03 PM

இரவு வாகன சோதனையில் எஸ்.ஐ.யின் அத்துமீறல்; கல்லூரி மாணவருக்கு லத்தி அடி; மருத்துவமனையில் அனுமதி

சேத்துப்பட்டில் இரவு வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ மற்றும் போலீஸாரிடம் ரசீது குறித்து கேள்வி எழுப்பிய கல்லூரி மாணவரை போலீஸார் சரமாரியாக லத்தியால் தாக்கினர். இதனால் காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் இது குறித்து காவல் ஆணையரிடம் புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.

சென்னை சூளைமேடு மங்களாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஹாருண் (19). இவர் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். நேற்று மாலை ராயப்பேட்டையில் உறவினர் இல்லத் திருமணம் ஒன்றுக்கு சென்றுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

இரவு 11.30 மணி ஆனதால் தன்னுடன் வந்த நண்பரை சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் இறக்கிவிடச் சென்றார். சேத்துப்பட்டு ஸ்பர்டாங் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா மற்றும் காவலர்கள் ஹாருணைத் தடுத்துள்ளனர்.

வாகனத்தின் ஆவணத்தை காட்டச்சொல்லி எஸ்.ஐ இளையராஜா கேட்டுள்ளார். ஆவணங்களைக் காட்டிய பின்னரும் அவர்களை அனுப்பாமல் நிறுத்தி வைத்துள்ளார். உடன் வந்த இன்னொரு வாகனத்திற்காகப் பணம் வாங்கியுள்ளனர். ஹாருண் வாகனத்திற்கும் பணத்தை எதிர்பார்த்து நிறுத்தி வைத்து நேரம் கடத்தியுள்ளார்.

ஹாருண் “சார் காலையில் சீக்கிரம் கல்லூரிக்குச் செல்ல வேண்டும், ஆவணங்களை எல்லாம் காட்டிவிட்டோம், எங்களை செல்ல அனுமதியுங்கள்” என்று கேட்டுள்ளார். “ஆவணங்களைக் காட்டினால் உன்னை அனுப்பணுமா? உன்னைப் பார்த்தால் திருடன் போலிருக்கிறாய்” என்று எஸ்.ஐ திட்டியுள்ளார்.

“நான் வேண்டுமானால் எனது மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டுச் செல்கிறேன், காலையில் வந்து ஒரிஜினல் ஆவணத்தைக் காட்டி வாகனத்தை எடுத்துக்கொள்கிறேன்” என்று ஹாருண் கூற, அதற்கு எஸ்.ஐ. திட்டியுள்ளார்.

“இன்னொரு வாகனத்திற்கு பணம் எதற்கு வாங்கினீர்கள், அதற்கு ரசீது கொடுங்கள்” என்று ஹாருண் கேட்டவுடன் கடுமையான கோபமடைந்த எஸ்.ஐ. இளையராஜா பளாரென்று கன்னத்தில் அறைந்துள்ளார், பிறகு தரக்குறைவாக திட்டியவர் ஆத்திரம் அடங்காமல் தடியால் துரத்தி துரத்தித் தாக்கியுள்ளார்.

உடனிருந்த போலீஸாரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதனால் கடுமையான காயம் அடைந்த கல்லூரி மாணவர் அங்கேயே உட்கார்ந்து விட்டார். பின்னர் அவர்களை எச்சரித்துப் போக அனுமதித்துள்ளனர்.

காயம் காரணமாக எழுந்து செல்ல முடியாமல் இருந்த ஹாருண் தனது தாயாருக்கு நள்ளிரவில் போன் செய்து வரவழைத்து சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

தனக்கு நேர்ந்த கொடுமையைப் புகாராக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு ஹாருண் அனுப்பி வைத்துள்ளார்.

போலீஸார் பொதுமக்களிடம் கனிவுடனும், குற்றவாளிகளைப் பிடிப்பதில் தீரத்துடனும் இருக்க வேண்டும் என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அடிக்கடி காவலர்களுக்கு அறிவுரையாக கூறுவார். சமீபத்தில் போரூரில் இளைஞர்களை சாலையில் தாக்கிய காவலரை உயர் அதிகாரிகளுடன் இனிப்புகள் வாங்கிக்கொண்டு தாக்கப்பட்ட இளைஞர்கள் வீட்டுக்குச் சென்று மன்னிப்பு கேட்க உத்தரவிட்டார்.

செயின் பறிப்பு திருடனை விரட்டிப் பிடித்த அனேக இளைஞர்களை அழைத்துப் பாராட்டி வருகிறார். சூர்யா என்ற சிறுவனுக்கு டிவிஎஸ் கம்பெனியில் வேலை வாங்கி தந்துள்ளார்.

ஆனால் காவல் ஆணையர் வழிகாட்டுதலை காவல் நிலையங்களில் வேலை பார்க்கும் காவலர்கள் மதிப்பதே இல்லை. பழைய பிரிட்டீஷ் கால மனப்பான்மையுடன் செயல்படுவதால் காவலர்கள் பற்றிய பொதுமக்கள் அபிப்ராயம் எப்போதும் எதிர்மறையாகவே உள்ளது.

'காஷ்மோரா' படத்தில் நடிக்க விரும்பினேன்: விஜய் சேதுபதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x