Published : 25 Jul 2018 11:40 AM
Last Updated : 25 Jul 2018 11:40 AM

துணை முதல்வர் ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு புகார்; லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு புகார் மீது லஞ்ச ஒழிப்பு துறையின் ஆரம்ப கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அளித்த புகாரின் மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், “துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதாபானு மற்றும் சகோதரர்கள் பெயரில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார். வருமானம் குறித்த தவறான தகவல்களை தேர்தல் வேட்புமனுக்களில் கொடுத்துள்ளார். தேனி மாவட்ட போஜராஜன் மில்ஸ் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட 140 கோடி ரூபாய் நிலத்தை சந்தை விலைக்கு குறைவாக கொடுத்து வாங்கியுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் செண்பகத்தோப்பு பகுதியில் மாந்தோப்பு வாங்கியுள்ளார். அமெரிக்கா, துருக்கி, இந்தோனேஷியா நாடுகளில் உள்ள நிறுவனங்களிலும், இந்திய நிறுவனங்களிலும் ஓ.பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் முதலீடு செய்துள்ளனர். 2011 தேர்தலில் மனைவிக்கு 24.20 லட்ச ரூபாய் சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்ட பன்னீர்செல்வம், 2016-ல் 78 லட்ச ரூபாய்க்கு சொத்துள்ளதாக தெரிவித்துள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது.

மகன் ஜெயபிரதீப் மூன்று நிறுவனங்களில் இயக்குனராக உள்ளார். பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சொத்துகளை வாங்கியுள்ளார். சேகர் ரெட்டி டைரியில் பன்னீர்செல்வத்துக்கு தொடர்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 6 மாதங்களில் அவரிடம் இருந்து ஓ.பி.எஸ். 4 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதாக டைரியில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் தனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளார். இதுதொடர்பாக மார்ச் 10-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரில் 3 மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. பொது ஊழியருக்கு எதிராகப் புகார் அளித்தால் உடனடியாக விசாரணை நடத்தவேண்டிய கடமை உள்ளதால், ஓ.பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு தொடர்பான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” இவ்வாறு தனது மனுவில் ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான குற்றவியல் தலைமை வழக்கறிஞர், ஆர்.எஸ்.பாரதியின் புகார் மனு தலைமைச்செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, புகார் மனுவை அனுப்பி வைத்தால் மட்டும் போதுமா? விசாரணை நடத்த வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினார்.

3 மாதங்களாக ஏன் விசாரணை நடத்தவில்லை? சேகர் ரெட்டியின் டைரியில் ஓபிஎஸ் பெயரும் உள்ளதாக ஆர்.எஸ்.பாரதி மனுவில் குறிப்பிட்டுள்ளதால் வழக்கை சிபிஐ விசாரனை நடத்த ஏன் உத்தரவிடக்கூடாது? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். ஒபிஎஸ் மீதான புகார் மனுவை சிபிஐக்கும் அளிக்க ஆர்.எஸ்.பாரதிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு புதன்கிழமை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 18-ம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையில் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். முதல்கட்ட விசாரணைக்கு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என தெரிவித்து நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x