Last Updated : 10 Jul, 2018 02:35 PM

 

Published : 10 Jul 2018 02:35 PM
Last Updated : 10 Jul 2018 02:35 PM

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாகப் படியுங்கள்: நாராயணசாமிக்கு கிரண்பேடி பதில்

தனக்கு அதிகாரம் இல்லை என்போர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாகப் படியுங்கள் என்று ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். முழுமையாக படித்துதான் பேரவையில் பேசினேன் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பதில் தந்துள்ளார்.

தேசிய மாணவர் படையைச் சேர்ந்த 10 மாணவிகள் உட்பட 40 மாணவர்கள் மேற்கொண்ட பெருங்கடல் பாய்மரப் பயணத்தை புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி இன்று காலை தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இக்குழுவினர் கடல் மார்க்கமாக கடலூர் மற்றும் நாகை மாவட்ட கடல் வழியாக தோப்புத்துறை சென்று வரும் 21-ம் தேதி புதுச்சேரிக்கு திரும்புகின்றனர். இவ்விழாவில் கடற்படை அதிகாரிகள் பங்கேற்றனர்.

மாணவர்களின் இந்த பாய்மரப் பயணத்தை புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் அரசு-ஆளுநருக்கு உள்ள அதிகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு புதுச்சேரிக்கு 110 சதவீதம் பொருந்தும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடி, புதுச்சேரிக்கு பொருந்தாது என்று தெரிவித்திருந்தார். மேலும் தீர்ப்பு தொடர்பாக விரிவாக கருத்து ஞாயிற்றுக்கிழமை தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதுபோல் கருத்து தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் மீன்பிடித் துறைமுகம் வந்திருந்த கிரண்பேடியிடம் தீர்ப்பு தொடர்பாக கேட்டதற்கு, "தனக்கு அதிகாரம் இல்லை என செல்பவர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக படித்து பார்க்க வேண்டும், அதில் யாருக்கு அதிகாரம் உள்ளது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது"என்றார்.

இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, "நான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாகப் படித்துதான் சட்டப்பேரவையில் பேசினேன்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x