Published : 23 Jul 2018 07:45 AM
Last Updated : 23 Jul 2018 07:45 AM

மேட்டூர் அருகே காவிரியில்  குளித்தபோது சோகம்; நீரில் மூழ்கி தம்பதி உட்பட 4 பேர் பலி: சிறுவனை தேடும் பணி தீவிரம்- கல்லூரி மாணவி உயிருடன் மீட்பு

மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் குளித்தபோது 6 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதில், தம்பதி உள்ளிட்ட 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

மேட்டூர் அடுத்த ரெட்டியூரைச் சேர்ந்தவர் கோபால். இவர் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பணிபுரிகிறார். இவரது உறவின ரான ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த விஜயமங்கலத்தைச் சேர்ந்த சரவணன் (35) என்பவர் விடுமுறையையொட்டி தனது குடும்பத்தினருடன் கோபால் வீட்டுக்கு வந்திருந்தார்.

மேட்டூர் காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அதில் குளிக்க நேற்று காலை சரவணன், அவரது மனைவி மைதிலி (32), மகன் ஹரிஹரன் (9), மைதிலியின் சகோதரியின் மகள் ரவீனா (15), கோபாலின் மகள்கள் பொறியியல் கல்லூரி மாணவிகளான வாணிஸ்ரீ (20), தனுஸ்ரீ (18) ஆகியோர் ரெட்டியூர் காவிரி ஆற்றில் நேற்று குளித்தனர். மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருந்தது.

ஆற்றில் குளித்தபோது, சரவண னும், ஹரிஹரனும் திடீரென இடறி ஆற்றில் ஆழமான பகுதி யில் சிக்கி, மூழ்கினர். மைதிலி உள்ளிட்ட அனைவரும் ஆற்றில் மூழ்கிய இருவரையும் காப்பாற்ற முயன்றபோது அனைவரும் ஆற் றில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதை பார்த்த அங்கிருந்த மீனவர்கள் ஆற்றில் குதித்து அவர்களை மீட்க முயன்றபோது தனுஸ்ரீ உயிருடன் மீட்கபட்டார். மற்றவர்கள் ஆற்றின் வேகத்தில் இழுக்கப்பட்டு நீரில் மூழ்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற மேட்டூர் போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் காவிரியில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் மீனவர்களும் பரிசலில் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், சரவணன், மைதிலி, வாணிஸ்ரீ, ரவீனா ஆகியோர் சடலங் களாக மீட்கப்பட்டனர். நேற்று மாலை வரை சிறுவன் ஹரிஹரன் மீட்கப்படவில்லை. இதனிடையே, மீட்பு பணியை சேலம் ஆட்சியர் ரோஹிணி, மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து ஆட்சியர் ரோஹிணி கூறும்போது, “மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 20,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றில் யாரும் குளிக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தோம். ஆனாலும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துவிட்டது. மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x