Last Updated : 24 Jul, 2018 03:57 PM

 

Published : 24 Jul 2018 03:57 PM
Last Updated : 24 Jul 2018 03:57 PM

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டணம் செலுத்தாமல் குடியிருந்ததால் வெளியேற்றப்பட்டவர் திடீர் மரணம்

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர் திடீரென மரணமடைந்தார்.

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியில் தனசேகர் என்பவர், கடந்த 70 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கோயிலுக்குச் செலுத்த வேண்டிய வாடகை கட்டணத்தை இவர் முறையாக செலுத்தவில்லை. இதையடுத்து கோயில் அதிகாரிகள் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தனசேகரன் வீட்டை உடனடியாக காலி செய்து வைக்கும்படி இணை ஆணையர் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து தனசேகருக்கு வீட்டைக் காலி செய்யும்படியும், வாடகை பாக்கி உடனடியாக செலுத்தும்படியும் அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை முறைப்படி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் வாடகை பாக்கி ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை அவர் செலுத்தவில்லை. இந்நிலையில் மீண்டும் மீண்டும் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து கடந்தாண்டு ஒரு லட்ச ரூபாயை செலுத்திவிட்டு மீத நிலுவைத்தொகையை தொடர்ந்து கேட்டும் செலுத்தாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் திங்கள்கிழமையுடன் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசம் முடிவடைந்தது. இதனால் இன்று காலை தனசேகர் வீட்டுக்கு அறநிலையத் துறையின் உதவி ஆணையர் இளையராஜா தலைமையில் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் தனசேகர் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து வெளியில் வைத்தனர். இந்நிலையில், தனசேகர் தனது வீட்டுக்குள் இறந்து கிடந்தார். 70 ஆண்டுகளாக தான் குடியிருந்த வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் தனசேகர் இறந்திருக்கலாம் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x