Published : 12 Jul 2018 01:39 PM
Last Updated : 12 Jul 2018 01:39 PM

மக்கள் நீதிமய்யம் உயர்நிலைக்குழு கலைப்பு; புதிய நிர்வாகிகளை அறிவித்தார் கமல்ஹாசன்

மக்கள் நீதிமய்யத்தின் உயர்நிலைக்குழுவை திடீரென கலைத்த நடிகர் கமல்ஹாசன். புதிய நிர்வாகிகளை அறிவித்தார்.

ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் ஓய்வு தமிழக அரசியலில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தது. திமுக, அதிமுக என இரு பெரும் இயக்கங்களும் அதன் தலைவர்களும் செல்வாக்காக இருந்த தமிழகத்தில் தற்போது தலைவர்களுக்கு பஞ்சமே இல்லை எனும் அளவுக்கு அரசியல் இயக்கங்கள் அதிகரித்துவிட்டன.

22 ஆண்டுகாலமாக இதோ வருவார் அதோ வருவார் என்று ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த கடந்த டிச.31 அன்று தான் அரசியலுக்கு வருவதாகவும் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாகவும் அறிவித்தார்.

நான் அரசிலுக்கு ஏற்கெனவே வந்துவிட்டேன் கட்சித்தான் ஆரம்பிக்கவில்லை என்று கூறிய கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி அன்று மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் இயக்கத்தை ஆரம்பித்தார். கட்சியின் தலைவராக கமல்ஹாசனும், உயர்நிலைக் குழு உறுப்பினர்களாக பாரதி கிருஷ்ணகுமார், ஸ்ரீபிரியா, கமீலா நாசர், சிநேகன், வழக்கறிஞர் ராஜசேகர், ஓய்வுப்பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மௌரியா உள்ளிட்டோரை நியமித்தார்.

கட்சி ஆரம்பித்து அறிக்கைவிட்டு சுற்றுப்பயணமும் செய்தார் கமல்ஹாசன். அவரது அறிவிப்புகள் பல அமைச்சர்களால் விமர்சிக்கப்பட்டது. காவிரி பிரச்சினையில் பேச்சுவார்த்தை, ஜாதி ஒழிய சான்றிதழ்களை கிழித்து போடவேண்டும் போன்ற அவரது சில அறிவிப்புகள் விமர்சிக்கப்பட்டன. ஆனாலும் கமல்ஹாசன் தனது இயக்கத்தை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணியில் முனைப்பாக இருந்தார்.

கடந்தவாரம் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு முறைப்படி அங்கீகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம். இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று பகல் 11.30 மணிக்கு கட்சிக்கொடியை கமல் ஏற்றிவைத்தார். பின்னர் பழைய உயர்நிலைக்குழுவை கலைத்துவிட்டு புதிய நிர்வாகிகளை முறைப்படி அறிவித்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக கமல்ஹாசன், பொதுச்செயலாளராக அருணாசலம், துணைத் தலைவராக ஞானசம்பந்தன், பொருளாளராக சுகா ஆகியோரை நியமிப்பதாக அறிவித்த கமல்ஹாசன் தொகுதி வாரியாக நிர்வாகிகளை அறிவித்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்த இயக்க வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றினார்கள். இனி அந்தக் குழுவில் இருந்த 11 பேரும் செயற்குழு உறுப்பினர்களாக இருந்து கட்சியை வழி நடத்துவார்கள்’ என அறிவித்த கமல்ஹாசன் உயர்நிலைக் குழு உறுப்பினர்களாக செயல்பட்ட பாரதி கிருஷ்ணகுமார், கமீலா நாசர், ஸ்ரீபிரியா, மௌரியா உள்பட 11 பேரும் செயற்குழு உறுப்பினர்கள் என அறிவித்தார்.

பின்னர் கட்சிக் கொடியையும் ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகம் முன் திரண்ட தொண்டர்களால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கு கமல்ஹாசன் தனது பேச்சின் இடையே மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x