

கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி அருகில் இருந்து சூளைமேடு வழியாக செல்லும் கூவம் ஆறு வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு புலியூர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் ஆக்கிரமிப்புகள் காரணமாக மழைக்காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வழக்கம். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெறுகிறது. ஆனால், பணிகள் ஆமைவேகத்தில் பல ஆண்டுகளாக நடைபெறுகிறது.
இந்த கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணியின்போது பொக்லைன் இயந்திரம் போய் வருவதற்கு வசதியாக கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்களை பாதியாக உடைத்தனர். பக்கவாட்டு சுவரையும் குறிப்பிட்ட தூரம் வரை இடித்தனர். தூர்வாரும் பணிகள் முடிவடைந்தன. ஆனால், உடைக்கப்பட்ட பாலங்கள் சரிசெய்யப்படவில்லை. பக்கவாட்டு சுவர்களும் சீரமைக்கப்படவில்லை.
உதாரணத்துக்கு, புலியூர் 1-வது பிரதான சாலை அருகே புலியூர் கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் தூர்வாரும் பணிக்காக பல மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. தற்போதும் பாதி உடைந்த நிலையிலேயே பாலம் காணப்படுகிறது. அதனால் அந்த வழியே நடந்து செல்வோர், வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
புலியூர் 1-வது பிரதான தெருவை சேர்ந்த ரவி என்பவர் கூறுகையில், “தூர்வாரும் பணிக்காக கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தின் ஒருபகுதியை உடைத்தார்கள். கால்வாயின் பக்கவாட்டு சுவரையும் இடித்தனர். அப்பணிகள் முடிந்த பிறகும் பாலத்தையும் பக்கவாட்டுச் சுவரையும் சீர்செய்யாமல் விட்டுச் சென்றுவிட்டனர்.
எனவே, அந்த பாலத்தின் வழியே லாரி போன்ற கனரக வாகனங்கள் வந்தால், அந்த வழியே நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றும் இதுவரை பாலத்தின் உடைந்த பகுதியும், கால்வாயின் பக்கவாட்டு சுவரும் சீர்செய்யப்படவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
அதுபோல மைனர் டிரஸ்ட்புரம் 3-வது குறுக்கு தெருவில் உள்ள பாலத்தின் நிலைமை இன்னமும் மோசம். அந்த பாலமும் பாதிக்கும் மேல் உடைந்த நிலையில் இருக்கிறது. எனவே, அவ்வழியே நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேற்கண்ட 2 பாலங்களிலும், எச்சரிக்கை பலகை எதுவும் வைக்கப்படவில்லை. மரச்சட்டங்களால் தடுப்பும் அமைக்கவில்லை. இரவு நேரத்தில் ஒளிரும் பட்டைகள் பொருத்தப்படவில்லை. பெரிய அசம்பாவிதம் ஏற்படும் முன் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று
புலியூர் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து 112-வது வார்டு கவுன்சிலர் எலிசபெத் அகஸ்டியனிடம் கேட்டபோது, “புலியூர் கால்வாயின் உடைந்த பாலங்களில் தேவையான எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கவும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தார்.